கோலாலம்பூர் – பயனர்களுக்கான மின்னஞ்சல் சேவையில் ‘ஜிமெயில்’ (Gmail) பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அவற்றில் பல்வேறு அம்சங்கள் நமக்கு தெரிந்து இருந்தாலும், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில வசதிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் ‘லாஸ்ட் அக்கௌன்ட் அக்டிவிட்டி’ (Last Account Activity).
ஒரு பொதுக் கணினியில் நாம் நமது ஜிமெயில் கணக்கை திறந்து தேவையான பணிகளை செய்துவிட்டு அவசரகதியில் ‘லாக் அவுட்’ (Log Out) செய்ய மறந்து விடுவோம். அப்புறம் சொந்த விஷயங்கள் வெளியாகிவிடுமோ என தவித்துக் கொண்டிருப்போம். கடவுச் சொற்களை மாற்றவும் முயற்சிப்போம்.
இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து தான் ஜிமெயிலில் அதற்கான வசதிகளை கூகுள் செய்து கொடுத்துள்ளது. அது போன்ற தருணங்களில், நமது திறன்பேசியிலோ அல்லது வேறொரு கணினியிலோ நமது ஜிமெயில் பக்கத்தைத் திறந்து, அதன் கீழ்ப்பகுதியில் Last account activity என்பதுடன் ‘டீடைல்ஸ்’ (Details) என்ற இணைப்பைத் திறக்க வேண்டும்.
அந்த டீடைல்ஸ் இணைப்பில், நாம் எந்தெந்த சாதனங்கள் மூலம் நமது ஜிமெயில் கணக்கைத் திறந்துள்ளோம், எவ்வளவு நேரத்துக்கு முன் திறந்துள்ளோம் என்று காட்டப்படும். அதன் பின்னர், ‘சைன் அவுட் ஆல் அதர் செஸன்’ (Sign Out all other session) என்பதை கிளிக் செய்தால், நாம் எந்தெந்த சாதனங்களில் நமது கணக்கை திறந்தோமோ, அவை அனைத்தில் இருந்து வெளியேறிவிடலாம்.