வாஷிங்டன் – புறாவின் இறக்கையில் கட்டி கடிதம் அனுப்பியது, குதிரை வீரன் மூலம் தூது அனுப்பியது, பின்நாளில், லாந்தர் விளக்கை ஏந்தியபடி, இரவு-பகல் பாராமல் ஓயாது ஓடிய அரசுப் பணியாளர்கள் மூலம் தகவல் பரிமாறியது.
பின்னர் தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உள்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இமெயில்’ எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்த ரேமண்ட் டாம்லின்சன், தனது 74-வது வயதில் காலமானார்.
அமெரிக்காவில் பிறந்து மாஸாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டாம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் (ARPANET system) முறையில் நெட்ஒர்க் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு கடிதங்களை அனுப்பும் முறையை 1971-ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.
பின்னர் ‘@’ குறியீட்டுடன் தூரத்தில் உள்ள இதர கம்ப்யூட்டர்களுக்கு அந்த தகவல்கள் போய்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார். இன்று இமெயில் என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டாம்லின்சன் தனது 74-ஆம் வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.
அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூகுளின் ‘ஜிமெயில்’ குழுமமும் ரே டாம்லின்சன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது. பின்னாளில், 1978-ஆம் ஆண்டுவாக்கில் இந்த சேவையை மேலும் நவீனப்படுத்திய சிவா அய்யாத்துரை என்ற தமிழர் ‘இமெயில்’ சேவைக்கான காப்புரிமையை 1982-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.