ரியாத் – சவுதி அரேபியாவில் சவுதி அரேபியன் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் உள்ள பிஷா நகரில் இருந்து சவுதி அரேபியன் ஏர்வேஸ் நிறுவன விமானம் 220 பயணிகளுடன் ரியாத் நகருக்கு கிளம்பியது. விமானத்தை விமானி வாலித் பின் முகமது அல் முகமது ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். வாலித் மயங்கிவிட்டார் என்று நினைத்த துணை விமானி ராமி காசி பாதாபரா விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கினார்.
இது குறித்து சவுதியா ஏர்வேஸ் எனப்படும் சவுதி அரேபியன் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில், விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தும் பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.