சென்னை – மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘சார்லி சாப்ளின்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி ரகுராம்.
நடன இயக்குனர் ரகுராம்-கிரிஜா தம்பதியரின் மகளான காயத்ரி ரகுராம், அதன்பின் தொடர்ந்து ‘விசில்’, ‘பரசுராம்’, ‘ஸ்டைல்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
அதன்பின் பொறியியலாளர் தீபக் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கேயே திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
அதன்பின் அவர் ‘கந்தசாமி’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் காயத்ரி ரகுராம் கூறும்போது,
”சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்காகவும் நான் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும். மாற்றம் கண்டிப்பாக வரும்” என்றார்.