கோலாலம்பூர் – முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசினும், முன்னாள் கெடா மந்திரி முக்ரிஸ் மகாதீரும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பதால், அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு அம்னோவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.
அடுத்த உச்ச மன்ற கூட்டத்திற்குள் இருவரையும் அம்னோவில் இருந்து நீக்கும் படி, கட்சி மேலிடத்திற்கு இரு அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது.
அதே வேளையில், பெட்ரோனாஸ் ஆலோசகர் மற்றும் புரோட்டான் தலைவர், பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளை தலைவர் என துன் டாக்டர் மகாதீர் வகிக்கும் பதவிகளையும், அவருக்கு அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து சலுகைகளையும் உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று சுபாங் மற்றும் பெரா ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த இரு அம்னோ தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், வரும் மார்ச் 27-ம் தேதி மகாதீர் தலைமையில் நஜிப்புக்கு எதிராக நடத்தப்படவுள்ள பேரணியை முறியடிக்கும் வகையில், அன்றைய நாளே நஜிப்புக்கு ஆதரவாகப் பேரணி நடத்த வேண்டும் என்றும் சுபாங் அம்னோ கூறி வருகின்றது.
நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாதீர் தலைமையில், ஜசெக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து மக்கள் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.