கோலோன் – ஜெர்மனியில் கோலோன் நகரில் புத்தாண்டு அன்று இரவு பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் அந்நாட்டில் உள்ள குடியேற்றவாதிகள் தான் காரணம் என்ற எண்ணம் நிலவுவதால், அவர்கள் மீது சில தரப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலோன் நகரில், பாகிஸ்தான் மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், 2 பாகிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் சிரியா நாட்டவர் ஒருவரும் கடும் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது, அங்கு வந்த அராப் அல்லது வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த குடியேற்றவாதிகள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் மீது பாலியல் வன்முறையும், கொள்ளைச் சம்பவங்களையும் நிகழ்த்தியதாக புகார்கள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் ஆத்திரம் மேலோங்கியது.
ஆப்பிரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த குடியேறிகளுக்கு ஜெர்மன் அரசாங்கம் இடம் அளித்ததால், உள்நாட்டு மக்களுக்கு பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.