டெஹ்ரான் – ஈரான் இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட 10 அமெரிக்க கடற்படையினர் விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவு தொடர்ந்து நீடிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெர்சியா வளைகுடாவில் இரண்டு அமெரிக்கக் கடற்படை படகுகள் ஈரானிய கடற்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்ததாக, அதிலிருந்த 10 கடற்படையினரை ஈரான் சிறைப் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து அண்மையில்தான் சுமுக நிலைமைக்கு வந்திருந்த அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த தூதரக உறவுகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் நிலவியது.
இருப்பினும், விசாரணைக்குப் பின்னர் அந்த 10 அமெரிக்கக் கடற்படையினரை ஈரான் இன்று விடுவித்துள்ளது. அந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்த ஒன்று என ஈரான் தெரிவித்துள்ளது
“எங்களின் விசாரணைகளின் மூலம் பயணப் பாதையைக் காட்டும் கருவிகள் சரியாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது” என ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள அமெரிக்க கடற்படையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.