Home Featured இந்தியா நேதாஜியின் உடல் பற்றி எரிவதை பார்த்தேன் – உதவியாளர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

நேதாஜியின் உடல் பற்றி எரிவதை பார்த்தேன் – உதவியாளர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

905
0
SHARE
Ad

nethajiலண்டன் – நேதாஜியின் மரணம் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் லண்டன் இணையதளம், நேதாஜி விமான விபத்தில் சிக்கிய இரவில் அவருடன் பயணித்த இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த அந்த தகவலில், “கடந்த 16-8-1945-ம் ஆண்டு காலை 10.30 மணியளவில், ஜப்பானை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. சுபாஷ் சந்திர போஸ், சில அரசாங்க அதிகாரிகள், இவர்களுடன் நானும் அந்த குழுவில் இருந்தேன். முதல் கட்டமாக சிங்கப்பூரில் இருந்து பேங்காக் நோக்கி ஜப்பானிய பாம்பர் விமானத்தில் பயணித்தோம். மதியம் 3.30 மணியளவில் பேங்காக் சென்றடைந்தோம்.”

“பின்னர்  17-ம் தேதி காலை 7.30 மணியளவில் பேங்காக்கில் எங்களுக்காக இரு ஜப்பான் விமானங்கள் காத்திருந்தன. நேதாஜி, ஸ்ரீ ஐயர், கர்னல் கேலோனல் குல்ஷார் சிங், கர்னல் தீப்நாத் தாஸ், லெப்டினன்ட் கர்னல் பிரீதம் சிங், மேஜர் ஏ.ஹசன் மற்றும் நான் உள்ளடக்கிய  7 பேருக்கும் ஒரு விமானம் ஒதுக்கப்பட்டு இருந்தது”

#TamilSchoolmychoice

“இந்திய சுதேசிய அரசுடன் இராணுவ நிர்வாகங்களை கவனிக்கும் ஜப்பானிய லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, சுதேசிய அரசுடன் அரசியல் விவகாரங்களுக்கான ஜப்பான் அமைச்சர் ஹெச். ஈ. ஹாட்சியா, ஆகியோர் மற்றொரு விமானத்தில் பயணித்தனர். அதே தினத்தில் காலை 10.45 மணிக்கு வியட்நாமில் உள்ள சைகூன் (ஹோசிமின் ) போய் சேர்ந்தோம்.”

“அன்று மாலை லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, ஹாட்சியா, கர்னல் தாடா, நேதாஜிக்கு ஒரு தகவல் அளித்தனர். அதாவது  ஜப்பான் புறப்படும் விமானத்தில் இரு இருக்கைகள் எஞ்சியிருக்கின்றன. ஜப்பானுக்கு புறப்படத் தயாராகுங்கள் என்று கூறப்பட்டது. விமானத்தில் இருக்கைகள் இல்லாத நிலையில் எங்களுடன் வந்த சுதேசிய இராணுவ அதிகாரிகள் அங்கேயே தங்கி விட்டனர். நேதாஜி என்னை மட்டும் உடன் அழைத்துக் கொண்டார்.”

“சைகூனில் இருந்து மாலை 5.15 மணியளவில் அந்த இரட்டை என்ஜீன் கொண்ட மிட்சுபிசி கே.ஐ- 21 ரக ஜப்பானிய பாம்பர் விமானம் புறப்பட்டது. இரவு 7.45 மணிக்கு பிரெஞ்சு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த தரோன் நகரில் விமானம் தரை இறங்கியது. அன்றைய இரவு அங்கேயே கழித்தோம். அடுத்த நாள் காலை (1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி) எங்கள் விமானம், தைவானில் உள்ள  தைஹோகூ (தைபே) நோக்கி பயணத்தை தொடங்கியது. மதியம் 2 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். சுமார் 35 நிமிடங்கள் ஓய்வெடுத்தோம்.”

“தொடர்ந்து 2.35 மணிக்கு ஜப்பானை நோக்கி விமானம் புறப்படத் தொடங்கியது. தைஹோகூ ஏரோ டிராமை விட்டு விமானம் மேலெழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே  விமானத்தின் முன் பகுதியில் இருந்து குண்டு வெடித்தது போல பெரும் சத்தம் கேட்டது. விமான என்ஜீனில் உள்ள இறக்கை ஒன்று உடைந்து தொங்கியதால் ஏற்பட்ட சத்தம் அது.  அடுத்த நிமிடமே தரையை நோக்கி விமானம் பாய்ந்தது. விமானம் தரையில் மோதியவுடன் முன்பக்கம் பின்புறமும் தீ பற்றத் தொடங்கியது.”

“விமானத்தில் நேதாஜி பெட்ரோல் டேங் அருகில் இருந்தார். நான் அவருக்கு அருகில் இருந்தேன். விமானத்தில் பற்றி எரிந்த தீக்கிடையே நாங்கள் வெளியேறினோம். முதலில் நான் வெளியே வந்தேன். எனக்கு பின்னால் நேதாஜி வந்தார். விமானத்தை விட்டு வெளியே வந்த நான் திரும்பி பார்த்த போது, நேதாஜியின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததை பார்த்தேன். நான் அவரது  உதவிக்கு ஓடினேன். அவரது உடைகளை கழற்றினேன். ஆனால் அவருக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. விமானம் கீழே விழுந்ததில் நேதாஜிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.”

“விமானம் தரையில் விழுந்த நேரத்தில் பெட்ரோல் டேங் வெடித்து அதில் இருந்த பெட்ரோல் நேதாஜி மீது சிதறியிருக்கலாம் என்பது என் கணிப்பு. இதனால்தான் அவர் மீது தீ இலகுவாக பரவியிருக்கலாம் என்று கருதுகிறேன். எனினும்  அருகில் இருந்த ஜப்பானிய மருத்துவமனைக்கு 15 நிமிடத்துக்குள் நேதாஜியை கொண்டு போய் விட்டோம். எனக்கும் உடல் எங்கும் தீக்காயங்கள், தலையில் பலத்த அடி பட்டிருந்தது. நேதாஜியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். மருத்துவர்கள் தீவிரமாக போராடி பார்த்தனர். ஆனால் அன்று இரவு 9 மணியளவில் நேதாஜி மரணம் அடைந்து விட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் இறுதி வார்த்தைகள்

“நான் கடைசி வரை இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே போராடினேன். எனது இறப்பும் அதே முயற்சிக்காகவே நிகழ்ந்துள்ளது. தோழர்களே கடைசி வரை போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள் ” என்பதே நேதாஜி கடைசி வார்த்தைகள் என்று அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.