கோலாலம்பூர்: புலனாய்வுத் துறையினர் துப்பறிந்து கண்டுபிடித்த தகவல்களை அடிப்படையாக வைத்து கோலாலம்பூரில் பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கும் 7 இடங்களை அடையாளம் கண்டு, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அறிவித்துள்ளார்.
பங்சார், ஹார்த்தாமாஸ், பப்ளிகா, தெ கெர்வ், புக்கிட் பிந்தார், கோலாலம்பூர் இரட்டைக் கோபுரம், கோலாலம்பூர் கோபுரம் ஆகியவையே அந்த 7 இடங்களாகும்!
இந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதோடு, கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லாபுவான் ஆகிய நகர்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் கவனித்து வருகின்றனர். இருப்பினும் இராணுவத்தினரையும் இந்தப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டுமா என்பது குறித்து தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெங்கு அட்னான் கூறியுள்ளார்.
துருக்கி, ஜாகர்த்தா போன்ற இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் சுற்றுப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சந்தேகப்படும்படியான நபர்களையோ, சம்பவங்களையோ கண்டால் உடனடியாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டுமெனவும் தெங்கு அட்னான் கேட்டுக் கொண்டுள்ளார்.