கோலாலம்பூர் – மலேசியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா குறித்து உலக மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம், நேரடி ஒளிபரப்பாக வழங்குவதற்கு ஆஸ்ட்ரோ எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
“வருகின்ற தைப்பூசத்தை முன்னிட்டு தைப்பூசத் தினக் கொண்டாட்டத்தையும் அதன் நிலவரங்களையும் 50 மணி நேர இடைவிடாத நேரடி ஒளிப்பரப்பாக ஆஸ்ட்ரோ உலகம் இரசிகர்களுக்கு வழங்கவிருக்கின்றது. இம்முயற்சியையை ஒட்டிய தகவல்களைப் பத்திரிகையாளருக்குத் தெரிவிக்கும் நோக்கத்தோடு நடைபெற்ற அதிகாரப்பூர்வ சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். இந்நிகழ்ச்சிக்கு என்னை அதிகாரப்பூர்வமாக வரவேற்ற இராஜாமணி அவர்களுக்கும் இம்முயற்சிக்குத் தலைமையேற்றிருக்கும் இரவிக்குமார் கிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
“மலேசியா, ஸ்ரீ லங்கா, இந்தியா என சுமார் 3 நாடுகளிலிருந்து 7 முருகப் பெருமானின் திருத்தலங்களை நோக்கி 50 மணி நேர இடைவிடாத ஒளிப்பரப்பை நடத்தி, உலக தமிழர்கள் அனைவரும் இந்த சமய நிகழ்ச்சியில் பயன்பெறுவதற்கு ஏதுவாக “திருமுருகாற்றுப்படை” என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு ஆஸ்ட்ரோ உலகம் ஒளியேற்றவிருக்கின்றது” என்றும் தனது அறிக்கையில் சுப்ரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“திருமுருகாற்றுப்படை – இலக்க்கியத்தைத் தமிழர்கள் சிலர் படித்திருந்தாலும் படித்திருக்கும் அனைவருக்கும் அதன் உள்ளர்த்தங்கள் தெரிவதில்லை. அத்தகைய ஓர் இலக்கியத்தை எடுத்து சாதாரண மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இம்முயற்சியில் இறங்கி, தைப்பூசத் திருவிழாவை இலக்கியத் திருவிழாவாக தமிழர்களுக்கு எடுத்தியம்பவிருக்கும் ஆஸ்ட்ரோ குழுமத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்றும் சுப்ரா கூறியுள்ளார்.
“நமது பாரம்பரியத்தில் அதிகமான பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஆனால், அவை சாதாரண மக்களுக்குப் போய் சேர்வதில்லை. இத்தகைய முயற்சியானது அனைவரிடத்திலும் கொண்டு போய் சேரும் வண்ணம் ஏற்பாடு செய்வது ஒளிபரப்பு துறையைச் சார்ந்தவர்களின் கடமை என்றே நான் கருதுகிறேன். சமுதாயம் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய மாபெரும் சக்தி ஒளிபரப்பு துறையைச் சார்ந்தவர்களிடம் இருக்கின்றது. அந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு இம்முயற்சியை வெற்றியடையச் செய்ய முழு ஆதரவினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என ஆஸ்ட்ரோவின் முயற்சிக்கு தனது பாராட்டுக்களை சுப்ரா தெரிவித்துக் கொண்டார்.
“இதன்வழியாக, முருகனுக்கு உகந்த ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் நிச்சயம் பொதுமக்களுக்குப் பரவலாகத் தெரியும். ஆறுபடை வழிபாடுகளும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். அத்தோடு மட்டுமல்லாமல், உலகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் மலேசியா உட்பட 3 நாடுகளிலும் எந்தளவு தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்று ஆஸ்ட்ரோ மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைக் குறைந்தது 10 கோடி இரசிகர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற சிந்தனையும் தைரியமும் மிகவும் பாராட்டுக்குரியது. இப்புதிய முயற்சி வெற்றியடைந்து உலகெங்கிலும் இருக்கக் கூடிய தமிழர்கள் குறிப்பிட்டிருக்கும் 7 ஸ்தலங்களிலும் நடைபெறக்கூடிய திருவிழாவைக் கண்டு பூரிப்படைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியதற்கும், இம்முயற்சிக்கும் முருகப் பெருமான் துணையிருக்க அவரது திருவடி போற்றி வேண்டிக் கொள்கிறேன்.” என்றும் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.