புது டெல்லி – தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது தான் என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் எவ்வித தவறும் இல்லை என்றும் ஜெயலலிதா தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து விசாரணையில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து எழுத்துப்பூர்வமான மனுத்தாக்கல் ஒன்றை, கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிடோர் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய அன்பழகன் மற்றும் கர்நாடக அரசுக்கு எந்த வீதமான உரிமையும் இல்லை என்பதால், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.