குயின்ஸ்லேண்ட் – ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியா மிருகக்காட்சி சாலை, மறைந்த விலங்குகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தது.
இன்று காலை அங்கு, 12 வயதான ரனா என்ற சுமத்ரன் புலி ஒன்று, தனது பராமரிப்பாளரை நகத்தால் கீறியதில் அவரது கைகள் மற்றும் நெற்றியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டதாக மிருகக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புலி மிகவும் ஆர்வமான மனநிலையில் இருந்ததால், அதன் அருகில் இருந்த பராமரிப்பாளரை நகத்தால் கீறி தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், 41 வயதான அந்த பராமரிப்பாளர் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார்.
‘முதலை வேட்டைக்காரர் – (Crocodile Hunter)’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ஸ்டீவ் இர்வின், கடந்த 2006-ம் ஆண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக கடலின் அடியில் படம் பிடித்துக் கொண்டிருந்த போது, திருக்கை மீன் ஒன்றால் மார்பில் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.