கோலாலம்பூர் – விலை உயர்ந்த தயாரிப்புகளையே வெளியிட்டு பழக்கப்பட்ட ஆப்பிள், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியிட இருக்கும் ஐபோன் வழக்கத்திற்கு மாறாக விலை மலிவானதாக இருக்கும் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த ஐபோன், 6சி (6c) ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஆப்பிள் குறித்த தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் தற்போது புதிய தகவல் ஒன்றை அளிக்கின்றன. அதாவது ஆப்பிள் அடுத்ததாக ஐபோன் 5 மற்றும் ஐபோன் 6 இணைந்த கலவையாக வெளியிட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த தயாரிப்பிற்கு தற்போது ஐபோன் 5எஸ்ஈ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐபோன் 5எஸ்ஈ என்றால் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) என்று பொருள்.
ஐபோன் 5-ன் தொழில்நுட்பக் கருவிகளில், ஐபோன் 6-ன் சிறப்பு அம்சங்களை புகுத்தி மலிவு விலையில் இந்த ஐபோனை ஆப்பிள் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐபோன் 5எஸ்ஈ (5SE) என அழைக்கப்படும் அந்த திறன்பேசி, 4 அங்குல அளவில் தயாராகி வருகிறதாம். 1 ஜிபி முதன்மை நினைவகம் (RAM), 16 ஜிபி இரண்டாம் நிலை நினைவகம், அதிகத் திறனுடைய ஏ8 சிப் என பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டதாக இருக்கும் என அந்த ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தைகளைக் குறி வைத்து தற்போது ஆப்பிள் இயங்கி வருவதால், ஏற்கனவே ஐபோன் 5 எஸ்-ன் விலை 22,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், கண்டிப்பாக ஐபோன் 5எஸ்ஈ 30,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.