கோலாலம்பூர் – வரும் ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பார் என ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
நடப்பு மந்திரி பெசாரான முக்ரிஸ் மகாதீர், இன்றோடு அப்பதவியில் இருந்து விலகுவார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் நிலவி வருகின்றன.
கடந்த 2013-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் ஆயர் ஹீத்தாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் வெற்றி பெற்றதில் இருந்து தற்போது வரை முக்ரிஸ் அப்பதவியில் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பு விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
அதே பதவி ஏற்பு விழாவில், முக்ரிஸ் மகாதீரின் புதிய பதவி குறித்து நஜிப் அறிவிப்பார் என்றும், முக்ரிசை கூட்டரசு அமைச்சராக நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அம்னோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், புதிய மந்திரி பெசாராகப் பதவி ஏற்கப் போகிறவர் யார்? என்ற கேள்விக்கு, கெடா அம்னோ துணைத் தலைவர் அகமட் பாஷா மொகமட் ஹனிபா தான் அதற்கு தகுதி வாய்ந்தவராக இருப்பதாக கெடா அம்னோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம், கெடா மந்திரி பெசாரின் தலைமைத்துவம் மீது தங்களுக்கும் நம்பிக்கை இல்லை என்று கூறி கெடா அம்னோ துணைத் தலைவர் அகமட் பாஷா மொகமட் ஹனிபா, மாநில அம்னோ தலைவர்களுடன் இணைந்து பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.