மலாக்கா – “மஇகாவிற்கு பெரும்பாலான மஇகா கிளைகளும், தலைவர்களும் மீண்டும் திரும்பி இணைந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் கட்சியில் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, அரசியல் ரீதியாக இந்தியர்களின் குரலை ஓங்கச் செய்வதற்குப் பதிலாக, தனிப்பிரிவாக தொடர்ந்து இயங்கி, ஒரு தரப்பு மஇகாவை இன்னும் பிளவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம்” என மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி இன்று கூறினார்.
“மஇகா ஒற்றுமைப் பொங்கல்” என்ற பெயரில் ஒரு குழுவினர் தொடர்ந்து மஇகா பெயரைப் பயன்படுத்தி மஇகாவில் பிளவு ஏற்படுத்தி வருவதைக் கண்டிக்கும் வகையில் தேவமணி இவ்வாறு கூறினார்.
இன்று மலாக்காவில், மஇகா ஏற்பாட்டில், தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற “மஇகா ஒற்றுமைப் பொங்கல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது தேவமணி இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மலாக்கா மாநில முதலமைச்சர் இட்ரிஸ் ஹாருணும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
“இன்றைய நிலையில், கட்சியில் இருந்து பல்வேறு காரணங்களால் பிரிந்து நின்ற மஇகா கிளைகள் மீண்டும் திரும்பி, மஇகா தற்போது 3,500 கிளைகளோடும், சுமார் 480,000 உறுப்பினர்களோடும், பலம் பொருந்திய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. நமது கட்சியை மேலும் வலுப்படுத்துவதை விட்டு விட்டு ஒரு சிறிய குழுவாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கட்சியை தொடர்ந்து மேலும் பிளவுபடுத்தக் கூடாது” என்றும் தேவமணி வலியுறுத்தினார்.
“குறிப்பாக, இன்று மலாக்காவில் நடைபெற்ற ஒற்றுமைப் பொங்கல் நிகழ்ச்சியில் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ எம்.எஸ்.மகாதேவனும் கலந்து கொண்டார். அவர் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக நீடிப்பதற்கும், மஇகா மலாக்கா மாநிலத் தலைவர் டத்தோ கண்ணனோடும், மாநில மஇகா செயற்குழுவோடும் இணைந்து பணியாற்றுவதற்கும் மஇகா தலைமையகம் அங்கீகரித்துள்ளது என்று தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார். கட்சியினுள்ளே, எதிர்மாறான அரசியல் கருத்துகள் கொண்டவர்களோடும் மஇகா தலைமையகமும், அதன் தலைவர்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்” என்றும் தேவமணி சுட்டிக் காட்டினார்.
மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் எம்.எஸ்.மகாதேவன் கடந்த காலங்களில் பழனிவேல் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.