கோலாலம்பூர் – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆண்டு வரியை (லெவி) இரண்டு மடங்காக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவால், மலேசியாவில் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 1,250 ரிங்கிட்டாக இருந்த ஒரு வெளிநாட்டுத் தொழிலாளரின் வரியை இரண்டு மடங்காக அதாவது 2,500 ரிங்கிட்டாக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவிற்கு மலேசிய உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு (Federation of Malaysian Manufacturers – FMM) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையிலும், பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், தொழிலாளர்களுக்கான வரியையும் உயர்த்தினால், உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று எஃப்எம்எம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் உற்பத்தியாளர்களை அழைத்து கலந்துரையாடி பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்றும், வேலை நேரம் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் எஃப்எம்எம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் உயர்ந்த பின்னர் தான், இது போன்ற முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் எஃப்எம்எம் கேட்டுக் கொண்டுள்ளது.