கோலாலம்பூர் – தென் அமெரிக்க நாடுகளில் தற்போது ஜிகா வைரஸ் மிகத் தீவிரமாக இருப்பதால், அந்நாடுகளுக்கு போவதைத் தவிர்த்துவிடுங்கள் என மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நுழைவு வாயில்களில் பொது சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வது இயலாத காரணம் என்பதால், பிரேசில், கொலம்பியா, ஹாண்டுரஸ் மற்றும் எல் சல்வேடர் ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கு தற்காலிகமாக மலேசியர்கள் செல்ல வேண்டாம் என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
“கொசுக்கடியால் ஏற்படும் இந்த நோய் நம் உடலில் பரவினாலும் டெங்கி போன்று எந்த ஒரு வெளிப்படையான அறிகுறிகளும் தெரியாது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்கள் போல் தான் காணப்படுவார்கள். அதனால் கண்டிப்பாக அவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்குச் செல்லமாட்டார்கள்” என்று சுப்ரா சிரம்பானில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் 13-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் அனைத்துலக அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளது.