ஜெனீவா – உலகமெங்கும் ‘ஜிகா’ வைரஸ் அதிவேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், உலக சுகாதார நிறுவனம் ( WHO) அனைத்துலக அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளது.
டெங்கி காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்களின் மூலமாகப் பரவி வரும் ஜிகா வரைஸ், தற்போது உலகில் 13-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிவேகமாகப் பரவியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் மார்க்ரேட் ஷான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜிகா வைரஸை கண்டறிவதிலும் அதை அழிப்பதிலும் உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம். இந்நிலையில், அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்காவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 4 மில்லியனை தாண்டும் வாய்ப்புகள் உள்ளன” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் ஜிகா வைரசைத் தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில்,
ஜிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு பயணம் செய்வோர் தங்களை கொசு கடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மார்க்ரேட் கேட்டுக் கொண்டுள்ளார்.