சிங்கப்பூர் – மலேசியாவிலோ, நாட்டையே உலுக்கிய விவகாரம் என்றாலும் இதுவரை ஒரு வழக்கு கூட 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பிலோ, அரசாங்கத் தரப்பிலோ இதுவரை தொடுக்கப்படவில்லை.
ஆனால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 1 எம்டிபி தொடர்பில் முதல் குற்றவியல் வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றம் எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிங்கப்பூரின் பிஎஸ்ஐ எனப்படும் சுவிட்சர்லாந்து வங்கியின் மூத்த வங்கியாளரான யாக் யூ சீ (Yak Yew Chee) மீது குற்றவியல் வழக்கு ஒன்று தொடுக்கப்படவிருக்கின்றது. இவர் 1எம்டிபி விவகாரத்தில் முக்கிய நபராகப் பேசப்பட்ட லோ தேக் ஜோ என்பவரின் வங்கியாளர் ஆவார். அதே வேளையில் 1எம்டிபி குளோபல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தனியார் வங்கியாளராகவும் செயல்பட்டு வந்தார்.
1எம்டிபி குளோபல் தொடர்பில் பல வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.
நாளை வெள்ளிக்கிழமையன்று குற்றம் சாட்டப்பட இருக்கும் யாக் யூ சீ-யின் சுமார் 10 மில்லியன் சிங்கப்பூர் டாலர் கொண்ட வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருக்கின்றது.
நாளைய குற்றவியல் வழக்குப் பதிவைத் தொடர்ந்து வரிசையாக மற்ற சில வழக்குகளும் சிங்கப்பூரின் நீதிமன்றங்களில் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் சுவிட்சர்லாந்து அரசாங்கமும் 1எம்டிபி தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கின்றது.