Home Featured நாடு “அடுத்த தேசிய முன்னணி கூட்டத்தில் கேவியஸ் கலந்து கொள்ள மாட்டாரா?” – மஇகா வட்டாரங்கள் கேள்வி!

“அடுத்த தேசிய முன்னணி கூட்டத்தில் கேவியஸ் கலந்து கொள்ள மாட்டாரா?” – மஇகா வட்டாரங்கள் கேள்வி!

758
0
SHARE
Ad

kayveasகோலாலம்பூர் – மஇகா தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடியாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி அடுத்த தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இத்தனை மாதங்களாக மஇகா தலைமைத்துவம் பற்றி வாய்திறக்காத கேவியஸ் திடீரென இப்போது சுப்ராவின் தலைமைத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை எனக் கூறியிருக்கின்றார்.

அதுவும் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் நடத்திய பெஸ்தா பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோதே கேவியஸ் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

சக தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் உள்விவகாரங்களில் மற்ற கட்சிகள் தலையிடக் கூடாது என கடைப்பிடிக்கப்படும் கொள்கைக்கு நேர் எதிர்மாறாக கேவியஸ் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

இதற்கு முன் மஇகாவை கேவியஸ் அங்கீகரித்ததில்லையா?

Subramaniam-கடந்த ஆண்டில் மஇகாவின் இடைக்கால தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்ரா, அதன் பின்னர் ஆகஸ்ட் 2015இல் அதிகாரபூர்வ மஇகா தேசியத் தலைவராக கமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது முதல் நடைபெற்று வந்திருக்கும் பல தேசிய முன்னணிக் கூட்டங்களிலும், அதிகாரபூர்வ தேசிய முன்னணி நிகழ்ச்சிகளிலும், சுப்ரா கலந்து கொண்டிருக்கின்றார். அவருடன் கேவியசும் கலந்து கொண்டிருக்கின்றார்.

சுப்ராவை மஇகா தேசியத் தலைவராக தான் அங்கீகரிக்கவில்லை என்றால், அந்தக் கூட்டங்களின் போதே கேவியஸ் தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் இது குறித்து கூறியிருக்க வேண்டும்.

அல்லது தான் அங்கீகரிக்காத சுப்ரா மஇகா தலைவராக அதிகாரபூர்வமாகக் கலந்து கொண்ட தேசிய முன்னணி கூட்டங்களில் இருந்து கேவியஸ் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்.

அப்போதெல்லாம் அப்படிச் செய்யாமல் – அப்போதெல்லாம் சுப்ராவை மஇகா தலைவராக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு – இப்போது மட்டும் திடீரென பழனிவேலுவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது சுப்ரா தலைமைத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை எனக் கூறுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மஇகா பலம் பெற்று வருவதால் அச்சமா?

Ponggal-Palanivel faction-brickfields-all leadersபழனிவேல் தரப்பினர் நடத்திய பெஸ்தா பொங்கல் நிகழ்ச்சியில் கேவியஸ்..

கேவியஸ் எழுப்பியுள்ள ‘அங்கீகார’ சர்ச்சையின் பின்னணிக்கான மற்றொரு காரணத்தையும் வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாம்.

மஇகாவுக்கும் – டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையிலான பிபிபி கட்சிக்கும் (இடையில் உருமாற்றம் கண்டு இனி “மைபிபிபி”) எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அதாவது எதிர்மறை மோதல்கள்தான்!

கடந்த காலங்களில் சாமிவேலு தலைமைத்துவத்தின் போது, மஇகாவிலிருந்து விலகிய பலர் பிபிபி கட்சியில் இணைந்தனர். இதனால் ஒரு காலத்தில் மஇகாவுக்கு மாற்று இந்தியர் கட்சியாக பிபிபி பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப, பிபிபி தலைவர் கேவியசும் எங்கள் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தியர்கள் என்பதால், இனி எங்கள் கட்சியும் இந்தியர் கட்சிதான் என அறிவித்திருந்தார்.

ஆனால், மிகுந்த எதிர்பார்ப்போடு பிபிபி பக்கம் சென்ற பல மஇகா தலைவர்கள் காலப்போக்கில், அங்கு நிலைமை மஇகாவை விட மோசம் என்பதை உணர்ந்து கொண்டு மீண்டும் மஇகாவுக்கே திரும்பினர்.

ஏற்கனவே, பிபிபி கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிலரும் மஇகாவுக்கே வந்து சேர்ந்தனர்.

அத்தகைய ஓர் உதாரணம்தான் – முன்னாள் துணையமைச்சர் டத்தோ பி.முருகையா!

துணைத் தலைவர் இல்லாத கட்சி – ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் – எதிர்ப்பு தெரிவிப்பவர்களை வெளியேற்றுவது – ஒரே நபர் தலைவராக தொடர்ந்து நீடிப்பது – என பல ‘சிறந்த ஜனநாயக மரபுகளைப்’ பின்பற்றும் கட்சியாக பிபிபி இருப்பதால், அதனால் சோர்ந்து போய் அந்தக் கட்சியிலிருந்து ஒதுங்கத் தொடங்கியவர்கள் அநேகம் பேர்!

பலம் பெற்று வரும் மஇகா

MIC-logoஇந்த சூழ்நிலையில்தான், சுப்ரா தலைமைத்துவத்தின் கீழ் மஇகா நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்தது. ஒரு காலத்தில் இந்தியர்களுக்கென வலுவுடன் இருக்கும் ஒரே கட்சி மஇகாதான் என்றிருந்த தோற்றத்தை மீண்டும் ஏற்படுத்த சுப்ராவும் அவரது குழுவினரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

ஜனநாயக முறைப்படி, எந்தவித தலைமைத்துவ தலையீடும் – நெருக்குதலும் – இன்றி உட்கட்சித் தேர்தல்கள் நடந்து, ஒரு வலுவான, தலைமைத்துவ ஆற்றல் நிறைந்த குழுவினர் மஇகாவை தற்போது வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றனர்.

2016ஆம் ஆண்டுக்கென தனியாகத் திட்டம் வகுத்து – இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு பிரச்சனையையும் அணுகி, அதற்கான தீர்வுகள் காண மஇகா தலைமைத்துவமும், மற்ற தலைவர்களும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக, மைபிபிபி, ஐபிஎப், மக்கள் சக்தி ஆகிய இந்தியர் சார்பு கட்சிகள் இந்திய சமுதாயத்தில் தங்களின் அரசியல் முக்கியத்துவத்தை – தேவையை – கட்டம் கட்டமாக இழந்து வருகின்றன. இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம்!

இதனால், மஇகாவை, பலவீனப்படுத்த வேண்டும், மஇகா தலைமைத்துவத்தைக் குறை கூற வேண்டும், என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த – இந்த இந்தியர் கட்சிகள் பழனிவேல் தரப்பினர் மூலமாகத் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மஇகா தலைமைத்துவத்தைத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என அறைகூவல் விடுத்துள்ளனர்.

கேவியஸ் தேசிய முன்னணி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வாரா?

கேவியஸ் இந்த ‘அங்கீகாரப்’ பிரச்சனையை வெகு சுலபமாகத் தீர்த்து வைத்து விடலாம்.

அடுத்த தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டம் நடைபெறும் போது, அந்தக் கூட்டத்தில் மஇகாவைப் பிரதிநிதித்து, அதன் தேசியத் தலைவராக சுப்ரா கலந்து கொண்டால் – கேவியஸ் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ய வேண்டும்.

அடுத்த தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் – சுப்ராவை மஇகா தலைவராக அங்கீகரிக்கக் கூடாது என – தேசிய முன்னணித் தலைவர் நஜிப் முன்னிலையில் கேட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நஜிப் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அந்தக் கூட்டத்திலிருந்து கேவியஸ் ஆட்சேபித்து வெளியேற வேண்டும்.

செய்வாரா கேவியஸ்?

கேள்வி கேட்கும் மஇகா வட்டாரங்கள் காத்திருக்கின்றன!

-இரா.முத்தரசன்