Home Featured தொழில் நுட்பம் “விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து” – முத்து நெடுமாறன்

“விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து” – முத்து நெடுமாறன்

694
0
SHARE
Ad

சுருக்கெழுத்து முறை மின்கருவிகளின் தோற்றத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. “எழுத்துகளைச் சுருக்கமாக எழுதுவதற்கு உலகளவில் பயன்படுத்தப்படும் முறை ஒன்று” என்று ‘விக்சனரி’ இதனை விளக்குகிறது. ஆங்கிலத்தில் இதை ‘short-hand’ என்று கூறுகிறோம். மொழியைவிட ஒலியையே இந்த முறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விரைவாகக் குறிப்புகளைப் பதிவு செய்யவே சுருக்கெழுத்து முறையை அதிகம் பயன்படுத்தினர்.

இந்த ‘விரைவாக எழுதவேண்டும்’ எனும் தேவை மின்கருவிகளைக் கொண்டு எழுதும் நமக்கும் கூடச் சில வேளைகளில் அவசியமாகத் தேவைப்படுகின்றது. முக்கியமான ஒரு சந்திப்பில் இருக்கும் போது நெருக்கமான ஒருவரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தால் என்ன செய்வோம்? “சந்திப்பில் இருக்கிறேன்”, “பிறகு அழைக்கிறேன்” போன்ற சுருக்கமான செய்தி ஒன்றை எழுதி குறுஞ்செய்தி வழி அனுப்பி விடுகிறோம். ஐபோன் பயன்படுத்துவோர் இதுபோன்ற சுருக்கமானச் செய்திகளை முன்கூட்டியே பதிவு செய்து, எடுக்கமுடியாத சூழ்நிலைகளில் அழைப்பு வரும்போது ஒரே தட்டில் வேண்டியச் செய்தியை அனுப்பி விடலாம் (படம்). சில ஆண்டிராய்டு கருவிகளிலும் இந்த வசதி இருக்கும்.

Muthu-Nedumaran-article-RepyCallWithMessage

#TamilSchoolmychoice

அழைப்பு வரும்போது மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் குறுஞ்செய்திகளையும் குறிப்புகளையும் எழுதும்போது, அடிக்கடி நாம் பயன்படுத்தும் சொற்களை, ஒவ்வொரு எழுத்தாகத் தட்டி எழுதாமல், ஒருசில எழுத்துகளைக் கொண்டே எழுதிவிட்டால் சிறப்பாக இருக்கும் – இல்லையா?

செல்லினத்தில் சுருக்கெழுத்து வசதி

ஓரிரு எழுத்துகளைத் தட்டியவுடனே, அந்த எழுத்துக்களைக் கொண்டுத் தொடங்கும் சில சொற்கள், பரிந்துரைகளாக நமக்குத் தரப்படுவதை, செல்லினத்தில் காண்கின்றோம். மேலும், தவறாக எழுதப்படும் பல சொற்கள் திருத்தத்துடன் தோன்றுவதையும் காண்கின்றோம். இவை பிழை திருத்தத்தோடு தோன்றும் பரிந்துரைகளே தவிர சுருக்கெழுத்துகள் அல்ல.

நாமே அடையாளமிடும் ஓரிரு எழுத்துகளைக் கொண்டு அந்தச் சொல்லின் முழு வடிவத்தைக் காட்டுவதே முறையான சுருக்கெழுத்து வசதி. செல்லினத்தில் இந்த வசதியும் உண்டு! இது குறித்து ஏற்கனெவே ஒரு கட்டுரையில் மேலோட்டமாகக் கூறியிருந்தோம். சற்று விரிவாக இங்குக் காண்போம். (குறிப்பு: இங்கே ‘short-hand’, ‘short-cut’ எனும் இரு ஆங்கிலக் கலச்சொற்களுக்கும் ‘சுருக்கெழுத்து’ என்றே தமிழில் கூறுகிறோம் – வேறொரு நல்லத் தமிழ்ச் சொல் கிடைக்கும் வரை).

தனிப்பட்ட சொற்பட்டியல்

நமது தனிப்பட்ட சொற்பட்டியலில் உள்ள சொற்கள் அனைத்திற்கும் சுருக்கெழுத்துகளைச் சேர்க்கலாம். ஆனால், அவ்வாறு செய்வதில் கூடுதல் பயன் எதையும் நாம் பெறப்போவதில்லை. நாம் அடிக்கடிப் பயன்படுத்துகின்ற நீண்ட சொற்றொடர்களுக்கு மட்டும் சுருக்கெழுத்துகளைச் சேர்ப்பதே சிறப்பு. புதிய சொற்களைச் சேர்க்கும் போதே அதற்கான சுருக்கெழுத்தையும் சேர்த்துவிடலாம்.

தனிப்பட்ட சொற்பட்டியலைத் திறப்பதற்கு, செல்லினத்தின் அமைப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Sellinam Settings => Text Correction => Personal Dictionary => Tamil. உங்கள் இடைமுகம் தமிழில் இருந்தால்: செல்லினம் அமைப்பு => பிழை திருத்தம் => தனிப்பட்ட சொற்பட்டியல் => தமிழ்.

இந்தத் திரையில், மேலே தோன்றும் ‘+’ குறியைத் தொட்டால் புதிய சொல்லைச் சேர்க்கும் படிவம் தோன்றும். அதில் உங்கள் சொற்றொடரையும் அதனைப் பெற நீங்கள் பயன்படுத்த விரும்பும் சுருக்கெழுத்தையும் சேர்க்கலாம். (செல்லினத்தில் ‘குறுக்கு வழி’ என்று இருக்கும்). அதன்பின், இந்தத் தொடரை நீங்கள் பெறுவதற்கு அதன் சுருக்கெழுத்தைத் தட்டினால் போதும். முழுமையான தொடர் மட்டும் பரிந்துரையாகத் தோன்றும். வேறு சொற்கள் தொன்றா. கீழுள்ள படங்கள் இந்த வழிமுறைகளை விளக்குகின்றன.

muthu-nedumaran-article-sc-steps

சுருக்கெழுத்துகள் தேர்வும் பயன்பாடும்

ஒரு தொடருக்கு நீங்கள் தேர்தெடுக்கும் சுருக்கெழுத்து வேறொரு சொல்லைத் தொடங்குவதைப்போல் இல்லாமல் இருப்பது நலம். அவ்வாறு இருந்தால் பரிந்துரைகளின் வழி  பல சொற்கள் வந்துவிடும். விரைவாக எழுதவேண்டும் என்றால் நாம் வேண்டும் சொல் மட்டும் உடனே வரவேண்டும் அல்லவா? ஆங்கிலத்தில் ‘on my way’ எனும் தொடருக்கு ‘omw’ எனும் சுருக்கெழுத்தை பெரும்பாலோர் பயன்படுத்துகிறோம். ‘omw’ என்று தொடங்கும் சொல், பட்டியலில் இருக்க வாய்ப்பில்லை. எனவே ‘omw’ என்று தட்டியவுடன் ‘on my way’ எனும் தொடர் மட்டுமே தோன்றுகிறது. அதுபோல, தமிழில் சுருக்கெழுத்தைத் தேர்வு செய்யும் போது வேறொரு சொல்லைத் தொடங்காத, விரைவில் தட்டெழுதக் கூடிய, எழுத்துக்களைத் தேர்வு செய்வதே சிறந்தது.

எடுத்துக்காட்டாக, அஞ்சல் விசைமுகத்தைப் பயன்படுத்துவோர் மெய் எழுத்துக்கள் மட்டும் அடங்கிய தொடர்களைத் தேர்ந்தெடுக்கலாம். மேலே உள்ள எடுத்துக்காட்டில் ‘வந்துகிட்டே இருக்கேன்’ எனும் பேச்சு வழக்கு சொற்றொடருக்கு ‘வ்கி’ எனும் சுருக்கெழுத்தை அடையாளம் இட்டுள்ளோம். ‘வ்கி’ என்று தொடங்கும் வேறொரு சொல், பட்டியலில் கண்டிப்பாக இருக்காது என்ற நம்பிக்கையில் :). ‘வ்’ என்பதற்கு பதிலாக ‘வ’ எழுதியிருந்தோம் என்றால் ‘வகித்து’, ‘வகிப்பது’ போன்ற சொற்கள் பரிந்துரைகளாக வந்திருக்கும் அல்லவா?

சுருக்கெழுத்துகளை நீங்கள் எந்தச் செயலியிலும் பயன்படுத்தலாம். ஒருமுறை அமைத்துவிட்டால் போதும். குறுஞ்செய்தி, வாட்சாப், முகநூல் போன்ற அனைத்துச் செயலிகளிலும் இவற்றைக் கொண்டு விரைவாகத் தமிழில் எழுதலாம்.

Muthu-Nedumaran-article-short-cut-featured

இந்தச் சொற்கள் எங்கே சேமிக்கப்படுகின்றன? நான் இரண்டு ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்துகிறேன், ஒன்றில் சேர்க்கப்பட்ட சுருக்கெழுத்து மற்றதிலும் தோன்றவேண்டும். செல்லினம் இதைச் செய்யுமா? இந்தக் கேள்விகளுக்கான விடையை வேறொரு கட்டுரையில் காண்போம்!

 

-முத்து நெடுமாறன்

(பின்குறிப்பு: செல்லினம் குறுஞ்செயலி மற்றும் முரசு அஞ்சல் மென்பொருள் உருவாக்குநரும், ‘செல்லியல்’  தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் எழுதி அண்மையில் ‘செல்லினம்’ குறுஞ்செயலியில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை ‘செல்லியல்’ வாசகர்களுக்காக மீண்டும் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)