கோலாலம்பூர் – சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு இன்று முதல் இணையதளம் மூலமாகப் பதிவுகள் தொடங்கியுள்ளன.
சட்டவிரோதமாகத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருக்கும் முதலாளிகள் பதிவுக்கட்டணம் மற்றும் நிர்வாகக் கட்டணமாக தலா 1,200 ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இத்தொகையில், குடிநுழைவுக் குற்றங்கள், வரி, விசா, செயலாக்க கட்டணம் மற்றும் வேலைக்கான அனுமதி உள்ளிட்டவை அடங்கவில்லை.
ஆக, ஒரு தொழிலாளிக்கு தலா 1,395 முதல் 3,485 ரிங்கிட் வரையில் கட்டணங்கள் செலுத்த வேண்டி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ சாகிப் குஸ்மி கூறுகையில், பதிவு செய்ய 800 ரிங்கிட்டும், நிர்வாகத்திற்கு 400 ரிங்கிட்டும் முதலாளிகள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கட்டணங்களை குடிநுழைவு இலாகா நிர்ணயிக்கவில்லை என்றும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சேவையாளர்கள் தான் அதை நிர்ணயித்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் விண்ணப்பங்களைப் பெற 2 நிறுவனங்களும், மற்ற நாடுகளின் விண்ணப்பங்களைப் பெற 3 நிறுவனங்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்றும் குடிநுழைவு இலாகாவின் அறிக்கை கூறுகின்றது.
இதனிடையே, இணையதளங்கள் மூலமாகப் பதிவுகள் செய்ய rehiring.imi.gov.my என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 03 – 8880 1555 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் மேல் விவரங்களைப் பெறலாம்.