ஜார்ஜ் டவுன் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் அண்மைய வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவருக்கு எதிராக எழுந்த புகார்களை அடுத்து, காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.
அவதூறு பரப்பியதாக டாக்டர் மகாதீருக்கு எதிரான விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று பினாங்கு காவல்துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காலிட், “டாக்டர் மகாதீரின் சர்ச்சைக்குரிய வலைப்பதிவுக்கு எதிராக பல புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளன.”
“அதில் வழக்கு ஏதாவது வந்தால், நாங்கள் தலைமை வழக்கறிஞர்களுக்கு பரிந்துரை செய்வோம்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.
அண்மையில், தனது வலைத்தளத்தில் மகாதீர் வெளியிட்ட கருத்து ஒன்றில், சுவிஸ் சட்டத்தை மீறி 4 பில்லியன் அமெரிக்க டாலர் மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்தது 1எம்டிபி பணமா? இல்லையா? என்பதை சுவிஸ் ஏஜி கண்டுபிடித்திடாத வகையில் மலேசிய ஏஜி (தலைமை வழக்கறிஞர் மன்றம்) மறைக்க முயற்சி செய்கிறது என்றும் மகாதீர் குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்னோ ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினார்.
“சில வழக்குகளில் யாரும் புகார் அளிக்காமலேயே நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வழக்கில் யாராவது புகார் அளித்தால் மட்டுமே விசாரணை செய்ய இயலும்” என்று கடந்த வாரம் காலிட் அபு பக்கர் அறிவித்தார்.
அவர் அறிவிப்பிற்குப் பிறகு மகாதீரின் வலைப்பதிவிற்கு எதிராகப் பல புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.