கோலாலம்பூர் – நஜிப்பை பதவியிலிருந்து வீழ்த்தும்வரை தனது போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சூளுரைத்துள்ளார்..
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தான் நடத்தி வரும் இந்தப் போராடத்தை எத்தகைய சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் மகாதீர் கூறியுள்ளார்.
“ஒரு முறை தோல்வியடைந்து விழுந்து விட்டால் மீண்டும் மீண்டும் எழுந்து முயற்சி செய்ய வேண்டும் என்று நான் நம்புகின்றேன். நாம் செய்வது சரியோ தவறோ, பலன்மிக்கதோ அப்போதுதான் தெரியவரும்” என்றும் மகாதீர் மேலும் தெரிவித்தார்.
நேற்று, ஷா ஆலாமிலுள்ள புரோட்டோன் கார் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது மகாதீர் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அவர் மேற்கொண்டு வந்த முயற்சிகளின் காரணமாக ஏன் இன்னும் நஜிப்பை பதவியில் இருந்து வீழ்த்த முடியவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த மகாதீர் “நாட்டின் நடப்பு சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை. அதே வேளையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதோடு, மக்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்” என்றும் குற்றம் சாட்டினார்.
“எனது காலத்திலும் ஐஎஸ்ஏ (ISA) போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தன என்றாலும் நான் என்னைக் குறை கூறுபவர்களுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியதில்லை. மாறாக, நாட்டுக்கு எதிராக ஏதாவது செய்திருந்தால் மட்டும் அந்த சட்டங்களைப் பயன்படுத்தினேன்” என்றும் மலேசியாவை 22 ஆண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சி செய்த மகாதீர் மேலும் கூறியுள்ளார்.
அமைதியான ஆட்சி மாற்றத்தையே தான் விரும்புவதாகவும், மாறாக, வன்முறைப் போராட்டங்கள் மூலம் ஆட்சியை வீழ்த்தத் தான் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் மகாதீர் விளக்கியுள்ளார்.