கோலாலம்பூர் – வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடியின் மகள் நூருல்ஹிடாயா தலையிடுவதை நிறுத்த வேண்டும். காரணம் அவர் ஒன்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று அரசு சாரா இயக்கமான இக்லாஸ் (Ikhlas) தெரிவித்துள்ளது.
அவரது கருத்துகள் அம்னோவை பாதிக்கும் என இக்லாஸ் தலைவர் மொகமட் ரிட்சுவான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“அவர் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை, அதனால் அவர் வாயை மூடிக் கொண்டு அமைதியாக உட்காருவது நல்லது”
“அவரது தந்தை ஒரு அரசியல்வாதி. கட்சியின் கௌரவத்தை அவர் (நூருல்ஹிடாயா) கெடுக்கக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கானவற்றை போதுமான வரையில் செய்துவிட்டீர்கள், அதனால் அமைதியாக இருங்கள் மற்றும் அதிகமாகப் பேசுவதை நிறுத்துங்கள்” என ரிட்சுவான் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்து வருவது குறித்து எழுந்த சர்ச்சையில், நூருல்ஹிடாயா வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரிட்சுவான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.