கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் இருக்கும் மருந்தகத்தில் பணியாற்றிய மூத்த மருத்துவர் பி.சுகுமாரனை (வயது 50) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அந்த மருந்தகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் திடீரென காணாமல் போனது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈப்போ காவல்நிலையத்தில் இன்று குலசேகரன் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
“டாக்டர். சுகுமாரன் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அலுவலகம் வரவில்லை என நாடாளுமன்ற மருந்தகத்தின் பணியாளர் தெரிவிக்கின்றார். நானும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகத் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். 80 வயதான பெற்றோருடன் அவர் தனியாக வசித்து வந்தார்.”
“அவர்கள் இதுவரை காவல்துறையில் புகார் அளிக்காததால், நான் புகார் அளிக்க முடிவு செய்தேன்”
“அவர் எனது தனிப்பட்ட மருத்துவரும் கூட. அவர் எங்கிருக்கிறார் என்பதை காவல்துறை கண்டறியும் என நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டாக்டர் சுகுமாறன் மாயமானது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் தகவல் தெரிவித்ததாக கூறும் குலசேகரன், அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால், காவல்துறையில் புகார் அளிக்க முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஈப்போ பொதுமருத்துவமனையிலும், கோலாலம்பூர் மருத்துவமனையிலும் இதற்கு முன்பு பணியாற்றிய டாக்டர் சுகுமாறன், கோலாலம்பூரில் தாமான் ஸ்ரீ ரம்பாயில் வசித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆண்டுகளாக டாக்டர் சுகுமாறன் அரசாங்கப் பணியில் இருப்பதாகவும் குலசேகரன் தெரிவித்துள்ளார்.