கோலாலம்பூர் – பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில், கடந்த வாரம் கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எஸ்.தீபாவின் பாதுகாப்பில் அவரது மகளும், அவரது முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லாவின் பாதுகாப்பில் அவரது மகனும் வளர வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், தீபாவிடம் வளரும் தனது மகள் ஒரு முஸ்லிமாகத் தான் வளர வேண்டும் என்றும், அவளை இந்துவாக மாற்றும் முயற்சியில் தீபா இறங்கினால், அவரிடமிருந்து மகளை பறித்துச் சென்றுவிடுவேன் என்றும் இஸ்வான் அப்துல்லா கூறியுள்ளார்.
கடந்த வாரம் கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தனக்கு மகிழ்ச்சி தான் என்றும் குறிப்பிடும் அவர், தனது கவலை எல்லாம் மகளின் மதத்தை நினைத்து தான் என்று தெரிவித்துள்ளார்.
இந்துவாகப் பிறந்து இஸ்லாமிற்கு மாறியவரான இஸ்வான் அப்துல்லா, தீபாவிடம் வளரும் தனது மகள் நூருல் நபிலாவின் (மதம் மாற்றம் செய்யப்படுவதற்கு முன் ஷர்மிளா) கல்வியும், அமைதியான மனநிலையும் மாறிவிடக் கூடாது என்ற காரணத்தால், அவர் முஸ்லிமாகவே வளர்க்கப்பட வேண்டும் என்று த மலேசிய இன்சைடர் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.
“நான் ஊடகங்களில் படித்தேன் மகளை இந்துவாகவே வளர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது அதுவே கடைசி முறையாக இருக்கட்டும்”
“இன்னொரு முறை அதே போல் அவள் பேசியதைக் கேட்டேன் என்றால் அல்லது என்னுடைய மகளை இந்து கோயிலுக்கு அழைத்துச் செல்வது, ஹலால் அல்லாத உணவுகளை சாப்பிடக் கொடுப்பது போன்ற செயல்களை செய்வதைக் கண்டால், அவளிடமிருந்து என்னுடைய மகளை பறித்துச் சென்றுவிடுவேன்” என்று இஸ்வான் தெரிவித்துள்ளார்.
“நான் அவர்களின் தந்தை. நான் ஒரு முஸ்லிம். நீதிமன்றம் அவர்கள் சார்ந்த இஸ்லாம் மதத்தை மீண்டும் மாற்றவில்லை”
“எனவே, அவர்கள் இஸ்லாமாகவே வளர அனுமதிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் இஸ்லாமில் இருப்பதா விலகுவதா என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்” என்று இஸ்வான் தெரிவித்துள்ளார்.