வாஷிங்டன் – உலக அரசியல் சூழல்களும், தூதரக ரீதியான மனமாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது பதவிக் காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாக, அண்டை நாடான கியூபாவுக்கு, அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதை நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் இந்த வருகை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். காரணம், அமெரிக்காவை அடுத்துள்ள கம்யூனிஸ்ட் நாடான கியூபாவுக்கு அமெரிக்க அதிபர் ஒருவர் வருகை தருவது கடந்த 90 ஆண்டுகளில் இதுவே முதன் முறையாக இருக்கும்.
அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக அறையில் – பிப்ரவரி 17ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.
அடுத்த மாதம் நான் கியூபா செல்கின்றேன். அங்கு கியூபா மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேலும் விரிவாக்குவதற்காக செல்கின்றேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் ஒபாமா பதிவிட்டுள்ளார்.
அநேகமாக ஒபாமாவின் கியூபா வருகை மார்ச் 21-22ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படலாம் என தகவல் ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் 1928ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் கேல்வின் கூலிட்ஜ் என்பவர்தான் கடைசியாக கியூபாவுக்கு வருகை தந்தவராவார்.
1961ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும்-ரஷியாவுக்கும் இடையிலே பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, கியூபாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்தத் தீவு நாட்டின் மீது பல முனைகளிலும் வணிகத் தடைகளை விதித்தது.
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை, தடைகளை மீட்டுக் கொள்ளாத அமெரிக்கா, காஸ்ட்ரோவின் தம்பி ராவுல் காஸ்ட்ரோ பதவியேற்றபின், வத்திகானின் போப்பாண்டவர் ரகசியமாக மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் முயற்சியின் காரணமாக, மீண்டும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்வந்தது.