நிபோங் திபால் – 22 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது லோரியை மோதியவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் பெர்ஜாயா மார்கெட் அருகே உள்ள சாலையில் நிகழ்ந்தது.
அச்சமயம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது அந்த லோரி வேகமாக வந்து மோதியது. இதில் அவை வெகுவாக சேதமடைந்தன. ஒன்றன் பின் ஒன்றாக அந்த லோரி 22 கார்களை சேதப்படுத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
இதையடுத்து 30 வயதைக் கடந்த அந்த லோரி ஓட்டுநர் செபராங் பிராய் செலதான் (எஸ்பிஎஸ்) மாவட்ட போலிசாரிடம் சரணடைந்தார். இரவு 9 மணியளவில் சரணடைந்த அவர், தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அம்மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் வான் ஹாசன் வான் அகமட் தெரிவித்தார்.
“முதற்கட்ட விசாரணையில் அந்த லோரி ஓட்டுநர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதையும் அறிந்துகொண்டோம்” என்று வான் ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.