சிங்கப்பூர் – ஜோகூர் குடிநுழைவு சோதனைகளைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 இந்தோனிசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்கள் நால்வரும் மத்தியக் கிழக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக சென்றுக் கொண்டிருந்தனர் என சிங்கப்பூர் காவல்துறை சந்தேகிக்கின்றது.
அந்த நால்வரில் 15 வயது சிறுவனும் அடக்கம் என உட்லேண்ட்ஸ் குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நால்வரும் அமன் அப்துரஹ்மான் என்ற தீவிரவாத போதகருடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் இந்தோனேசிய காவல்துறை நம்புகின்றது. இந்த அமன் அப்துரஹ்மான் தான் கடந்த ஜனவரி 14-ம் தேதி ஜகார்த்தாவில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் நால்வரையும், பாத்தாம் தீவில் வைத்து இந்தோனிசிய காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது சிங்கப்பூர்.
கோலாலம்பூரில் சதி வேலைகளை செய்ய தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டிருப்பதால், அங்கு செல்லும் ஆஸ்திரேலியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.