தமிழ் நாட்டுக்கு என ஒரு சாபக்கேடு கடந்த 20 ஆண்டுகளாக அம்மாநில அரசியலில் மையம் கொண்டு, ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலையையும் சீரழித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
முன்னணிக் கட்சிகள் அனைத்திலும் ஊடுருவியுள்ள வாரிசு மற்றும் குடும்ப அரசியல் என்னும் பீடைதான் அது!
தொழில் நுட்பம் என்று எடுத்துக் கொண்டால், அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தமிழ்நாட்டுக்காரன்தான் – சுந்தர் பிச்சை என்கிறார்கள்!
வணிகத் துறையில் உலகின் மிகப் பெரிய பயனீட்டாளர் உணவுப் பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பெப்சி கோலாவை நிர்வகிக்க இவர்தான் சரியானவர் என அந்நிறுவனம் தேர்ந்தெடுப்பது இந்திரா நூயி என்ற தமிழ்நாட்டுப் பெண்ணை!
ஆங்கிலப் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தமிழனுக்கு ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்கள் கொடுத்துக் கொண்டாடுகின்றார்கள் ஹாலிவுட்காரர்கள்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! அமெரிக்காவில், உலகின் மற்ற நாடுகளில், எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தமிழர்கள்தான் முன்னணி வகிக்கின்றனர்.
தமிழ் சினிமா என்று எடுத்துக் கொண்டாலும், எத்தனையோ வாரிசுகள் களமிறக்கி விடப்பட்டாலும், எந்தவித சினிமாக் குடும்பப் பின்னணியும் இல்லாத அஜித்குமார்தான் இன்றைக்கு உச்ச நட்சத்திரமாக தனது திறமையினால் உலா வருகின்றார்.
ஆனால், தமிழ்நாட்டு அரசியல் என்றும் வரும்போது, ஓர் அரசியல் கட்சி வரும்போது, அந்தக் கட்சியின் தலைவரின் மகனைத் தவிர வேறு யாருக்கும் – வேறு எந்தத் தமிழனுக்கும் அரசியல் நடத்த தகுதியில்லை என்பதுபோன்ற மோசமான கலாச்சாரம் தமிழ் நாட்டில் முன்வைக்கப்படுகின்றது.
தலைவரின் பிள்ளைகளுக்குத்தான் தமிழ் நாட்டை ஆளத் தகுதி இருக்கின்றது, மற்ற தமிழர்களுக்குத் தகுதியில்லை என்பது போன்ற மாயை உருவாக்கப்படுகின்றது.
அந்தத் தலைவர் இருக்கும்போதும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, அவரது குடும்பத்தினர் காட்டும் அரசியல் தலையீடும், தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கின்றது.
இதில் சோகம் என்னவென்றால், பாரம்பரியம் மிக்க கட்சிகளில் மட்டுமல்லாது, நேற்று முளைத்த புதுக் கட்சிகளில் கூட இத்தகைய நிலைமை இருப்பதுதான் கேவலமான முன்னுதாரணம்.
திமுக – காங்கிரஸ் கட்சிகளின் குடும்ப அரசியல்
காங்கிரசின் அம்மா-மகன் குடும்ப அரசியல் இந்தியா முழுக்க பிரசித்தம் என்றால், அந்தக் கட்சி தமிழகத்தில் கைகோர்க்கும் திமுகவின் குடும்ப அரசியல் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த புதுடில்லியிலிருந்து வந்திறங்கி கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை தனது குழுவினருடன் சென்றடைகின்றார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்!
அங்கு அவருக்காக கருணாநிதியுடன் காத்திருப்பது அவரது மகன் ஸ்டாலினும், மகள் கனிமொழியும்!
அண்ணா உருவாக்கிய, எப்பேர்ப்பட்ட பாரம்பரியம் மிக்க கட்சி திமுக!
ஐம்பெரும் தலைவர்களைக் கொண்ட கட்சி என்ற பெருமை தவிர்த்து எண்ணற்ற கல்விமான்களை, தொழில் நிபுணர்களை, தமிழ் இனப் போராளிகளை தமிழக அரசியலுக்கு வார்த்தெடுத்துத் தந்த கட்சியின் சார்பாக உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள, அந்தக் கட்சியில் வேறு ஒரு தலைவர் கூட – பொறுப்பாளர்கூட இல்லை என்பது சோகமா? மாயையா? அல்லது வேண்டுமென்றே மறைக்கப்படுகின்ற அரசியல் வியூகமா?
இன்னொரு பக்கத்தில், அடுத்த நாளே இந்தக் கூட்டணி வெல்ல முடியாது என அறிக்கை விடுகின்றார், கருணாநிதியின் மற்றொரு மகன் மு.க.அழகிரி.
அவ்வளவுதான்!
அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்ற அறிக்கை அடுத்த கணமே பறந்து வருகின்றது தந்தையான கருணாநிதியிடம் இருந்து!
தான் பெற்று வளர்த்த மகனை அரசியலில் மாற்று சக்தியாக அல்லது மற்றொரு மகனுக்கு இணை-சக்தியாக உருவாக்க நினைத்த கருணாநிதிக்கே எதிராக விசுவரூபம் எடுத்து நிற்கின்றது அழகிரியின் இன்றைய அரசியல் அதிரடிகள்.
‘நமக்கு நாமே’ நடைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய மகன் ஸ்டாலினைப் பாராட்டி, மகுடம் சூட்டி மகிழும் கருணாநிதி…
எம்ஜிஆர் காலத்திலேயே தனது மூத்த மகன் மு.க.முத்துவை சினிமாவில் கதாநாயகனாக்கி, அழகு பார்த்தவர் – பரிசோதித்துப் பார்த்தவர் கருணாநிதி. இன்றோ, கருணாநிதிக்குப் பிறகு திமுகவை வழிநடத்தப் போவது ஸ்டாலின்தான் என்பதை உறுதி செய்துவிட்டார்.
தமிழனின் இனம், மொழி காக்க உருவான பேரியக்கம், இன்று கருணாநிதியின் இரண்டு மகன்களில் யாருக்கு கட்சியில் அதிகம் ஆதரவு, என்பதை விவாதமேடை அமைத்து நிர்ணயிக்கும் நிலைக்கு இறங்கிவிட்டது.
இரண்டு மகன்களைத் தவிர மூன்றாவது சக்தியாக யார் கட்சியில் உருவாக்கப்படுகின்றார் என்றால், கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் ஒரே மகள் கனிமொழிதான் – அவ்வாறு உருவாக்கப்படுகின்றார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்குப் பின்னர், அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பில் புதுடில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகின்றார், பிரதமர் மோடி. அதில் திமுக சார்பாக கலந்து கொள்வதும் கனிமொழிதான்!
கட்சியில் வேறு யாருமே தலைவர்கள் இல்லையா? எந்தத் தொண்டனும் கேட்க மாட்டான்! கேட்டால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக எதிர் நடவடிக்கைக் கணைகள் பாயும்!
ஸ்டாலினுக்கு அடுத்து மருமகன் சபரீசனா?
சரி! கட்சியில் முன்னிலைப்படுத்தப்படும் மு.க.ஸ்டாலின் என்ன செய்கின்றார் என்றால், அவரும் தனது மருமகன் சபரீசனைத்தான் முன்னிறுத்துகின்றார்.
ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ களப் பயணத்தை திட்டமிட்டதும், வடிவமைத்ததும் அவரது மருமகன் சபரீசன்தான் என, பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதிவருகின்றன. இன்றைக்கு ஸ்டாலினின் அரசியல் வியூகங்களை வகுப்பதிலும், கட்சியையும், அரசியல் ரீதியாக ஸ்டாலினையும் வளர்ப்பதற்கு உதவக் கூடிய தொழில்நுட்ப விஷயங்களில் ஆதிக்கம் செலுத்துவதும் சபரீசன்தான்.
சபரீசன் குறித்த சில கருத்துகள் தமிழக சட்டமன்றத்திலும் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னால் அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள்.
எத்தனையோ தமிழர் நலன் காக்கும் போராட்டங்கள் நடத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்த கட்சி திமுக! ஆனால், இன்றைக்கு ஸ்டாலினின் மருமகன் பற்றி கூறிவிட்டார்கள் என்பதற்காக, சட்டமன்றத்திலிருந்து அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்கின்றார்கள். என்னே வளர்ச்சி!
இன்னொரு புறத்தில், ஸ்டாலினின் மகன், உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் கதாநாயகனாக நடித்தும், சினிமா வணிகத் துறைகளிலும் மெல்ல, மெல்ல தனது ஆளுமையை ஆழமாகப் பதித்து வருகின்றார்.
மற்ற கட்சிகள் – பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ்!
ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பெரும்பான்மை ஆதரவில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் இராமதாஸ், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது தனது சொந்த மகன் அன்புமணியை. அன்புமணியோ கட்சி நடவடிக்கைகளில் அவரது மனைவிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றார்.
சாதியை முன்னிறுத்தி நடத்தப்படும் கட்சியில் கூட, தனது சொந்த சாதிக்காரன் ஒருவனை தலைவனாகத் தேர்ந்தெடுக்க அஞ்சுகின்றது அந்தக் கட்சியின் தலைமை!
விஜயகாந்தின் குடும்பம்தான் தேமுதிக
எத்தனையோ எதிர்பார்ப்புகளுக்கிடையில், கட்சி தொடங்கியவர் விஜயகாந்த். தனது கதாபாத்திரங்களைப் போலவே, ஊழலுக்கும், அநியாயத்திற்கும் எதிராக முழக்கமிடுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக, இன்றைக்கு அவரது தேமுதிக கட்சி, அவரது குடும்பத்தைச் சார்ந்துதான் இயங்குகின்றது.
எல்லாக் கூட்டங்களிலும் விஜயகாந்தைவிட அதிகமாகப் பேசுவதும், பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுப்பதும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாதான்.
தேமுதிக குறித்த கூட்டணி பேச்சு வார்த்தைகளில் – சென்னை முதல் புதுடில்லி வரை – பங்கு கொள்வது யார் என்றால், விஜயகாந்தின் மைத்துனரும், மனைவி பிரேமலதாவின் சகோதரருமான சுதீஷ்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இவர் போட்டியிட்டார்.
அண்மையில் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக அரசியல் திருப்பு முனை மாநாட்டு மேடையில் உரையாற்றும்போது கூட தனது மகன்களைப் பற்றி பெருமை பொங்க பேசினார் விஜயகாந்த்.
இப்படியாக, அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் கதாநாயகனின் அரசியல் கட்சி எனத் தொடங்கப்பட்ட தேமுதிக, இன்று, அவருடைய குடும்பத்துக்குள் சுருங்கி விட்டது.
தமிழ் மாநிலக் காங்கிரஸ் – தந்தையின் பாதையில் தனயன் வாசன்
காங்கிரசில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், மறைந்த தனது தந்தை மூப்பனாரின் பிரபலத்தின் நிழலில் அரசியல் நடத்துகின்றார், தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற கட்சியின் வழி! மற்றபடி அவருக்கென தனிப்பட்ட செல்வாக்கோ, திறமையோ இருப்பதாகத் தெரியவில்லை.
காங்கிரசில் இருந்து ஒரு பிரிவை பிரித்து வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றார் என்ற அடிப்படையில்தான் – காங்கிரஸ் வாக்குகளை சிதறடிப்பதில் உதவ முடியும் என்ற நோக்கத்தில்தான் – எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றார் வாசன்.
அதிமுகவின் குடும்ப அரசியல்
இந்தத் தமிழகக் கட்சிகளின் மத்தியில் வித்தியாசமான குடும்ப அரசியலைக் கொண்டது அதிமுக. ஜெயலலிதாவோ, எனக்குக் குடும்பமுமில்லை, குழந்தைகளுமில்லை – தமிழகம்தான் எனது குடும்பம், தமிழக மக்கள்தான் எனது உறவுகள் என்பார்.
ஆனால், அந்தக் கட்சி சிக்குண்டிருப்பது சசிகலா குடும்பத்தின் வலைப் பின்னலில். ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு முன்னால் அந்தக் குடும்பத்தினரின் நிலைமை என்ன – இன்றைய நிலைமை என்ன என்பது ஒரு பி.எச்.டி பட்டத்துக்குரிய ஆராய்ச்சி!
அதிமுக மீதும் – ஜெயலலிதா மீதும் அந்தக் குடும்பம் கொண்டுள்ள விரிவான ஆதிக்கமும், விசுவாசமும், அதனைக் கொண்டு அவர்கள் அரசியல், வணிகம் ரீதியாக சாதித்துக் கொள்வதும் தனிக்கட்டுரைக்கான அம்சங்களை உள்ளடக்கிய விஷயங்கள்!
மக்கள் நலக் கூட்டணி மட்டுமே வித்தியாசம்
இவர்களிடையே, வித்தியாசப்பட்டு நிற்பவர்கள் மக்கள் நலக் கூட்டணியினர் மட்டுமே!
கம்யூனிஸ்ட் கட்சிகளில் வாரிசு அரசியலுக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை என்பது ஒரு புறமிருக்க,
அந்தக் கட்சிகளின் ஆதரவு மையங்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, சுருங்கிக் கொண்டே வருகின்றன என்பதால் எதிர்காலத்தில் வாரிசு அரசியலைப் பின்பற்றாவிட்டாலும், மக்கள் மத்தியில் அவர்களின் கொள்கைகள் தொடர்ந்து எடுபடுமா – ஏற்றுக் கொள்ளப்படுமா – என்பதும் கேள்விக்குறிதான் .
வைகோவின் மதிமுகவில் மட்டும் வைகோவைத் தவிர வேறு யாருமே முன்னிறுத்தப்படுவதில்லை, அவரது குடும்பத்தினர் உட்பட! இது பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், வைகோவைத் தவிர வேறு யாருமே அங்கு தலைவர்களாக அடையாளம் காட்டப்படுவதில்லை என்பதும் அந்தக் கட்சிக்கான பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதால் அங்கேயும் குடும்ப அரசியல் பிரச்சனை இன்னும் தலைதூக்கவில்லை.
எனினும், குடும்ப – வாரிசு அரசியலை முன்னிறுத்தாத மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக வாக்காளர்களின் ஆதரவு கிடைக்குமா என்பதை தேர்தல் முடிவுகள்தான் காட்டும்! இந்த தேர்தலில் இது ஒரு புதிய அணுகுமுறை என்பதால்!
ஆக, குடும்ப மற்றும் வாரிசு அரசியல் கலாச்சாரம், தமிழகக் கட்சிகளில் இருந்து ஒழிக்கப்பட்டு, எப்படி மற்றத் துறைகளில் திறமை வாய்ந்த தமிழர்கள் உலக அளவில் அடையாளம் காட்டப்படுகின்றார்களோ –
அதே போல தமிழக அரசியலிலும் குடும்பப் பின்னணி, அரசியல் பின்னணி இல்லாமல் அரசியல் திறமையை மட்டுமே, முன்னிறுத்தி தமிழர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலைமை எப்போது உருவாகின்றதோ –
அப்போதுதான் தமிழக அரசியலும் மாறும் – உருமாற்றம் பெறும்!
நடக்குமா?
– இரா.முத்தரசன்