சென்னை – “என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?” என்ற இந்த வாக்கியத்திற்கு அப்படி என்னதான் சக்தி வந்ததோ தெரியவில்லை. சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருவான வசனம் அப்படியே நட்பு ஊடகங்களில் பரவி, சினிமாவில் பாடலாக உருவெடுத்து, வசனமாகக் கலந்து, இப்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை விமர்சிக்கும் திமுக-வின் புதிய ‘ஹேஸ்டேக்காக’ மாறியுள்ளது.
இதை பகிர்ந்தது வேறுயாருமல்ல, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியே இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்துள்ள பதிவில், “5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவில பாத்திருப்பீங்க … நேர்ல பாத்திருக்கீங்களா?” என்ற கிண்டலடிக்கும் வசனத்துடன், ‘என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?’ என்ற ஹேஸ்டேக்கையும் இணைத்துள்ளார்.
மேலும் அதில், ‘முடியட்டும்.. விடியட்டும்’ என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளார்.
அதிலும் குறிப்பாக நாளை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களது உடம்பில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பச்சை குத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திமுக வெளியிட்டுள்ள இந்த ஹேஸ்டேக் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை ஆளுங்கட்சி என்னமாதிரியான வாசகத்துடன் வரப்போகிறதோ?…
தொகுப்பு: செல்லியல்