இலண்டன் – எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நாணயமான ஸ்டெர்லிங் பவுண்ட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகின்றது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த நாணயத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை அடைந்துள்ளது.
வாக்கெடுப்பின் காரணமாக, ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுமானால், அதன் மூலம் அதன் எதிர்காலப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக, ஸ்டெர்லிங் பவுண்ட் நாணயத்தைத் தொடர்ந்து கையிருப்பில் வைத்திருக்கவும், அதில் முதலீடு செய்யவும், நாணய பரிமாற்ற முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற இலண்டன் மேயர் (மாநகரசபைத் தலைவர்) போரிஸ் ஜோன்சனின் பகிரங்க அறிவிப்பும், ஸ்டெர்லிங் பவுண்ட் தொடர்ந்து சரிவதற்கான மற்ற காரணங்கள் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இலண்டன் நகரவாசிகளிடையே மிகுந்த செல்வாக்கு படைத்த ஜோன்சனின் பிரச்சாரத்தால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சூழ்நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் அரசியல் கணிப்பாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.