கோலாலம்பூர் – நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எழுந்து வந்த முஸ்லீம் மத மாற்றப் பிரச்சனை தற்போது இன்னொரு கோணத்தில் விசுவரூபம் எடுத்துள்ளது. இந்துக்களில் 7,000 பேர்களின் அதிகாரபூர்வ ஆவணங்களில் அவர்கள் முஸ்லீம்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக, புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண “இந்து மதமாற்ற நடவடிக்கைக் குழு” என்ற பெயரில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, பிரதமரிடம் அதற்கான மகஜர் ஒன்று வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (23 பிப்ரவரி 2016) தலைநகரில் இந்த நோக்கத்திற்காகக் கூடிய பல இந்து இயக்கங்கள் இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளன. இந்த அமைப்பின் தலைமைச் செயலாளராக அருண் துரைசாமி செயல்படுவார்.
தவறான பதிவுகளின் காரணமாகவே, 7,000 பேர்களின் மதம் மாற்றப்பட்டு, ஆவணங்களில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கமும் அதிர்ச்சி
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்து மதமாற்ற நடவடிக்கைக் குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைமைச் செயலாளர் அருண் துரைசாமி…
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து பல்வேறு இயக்கங்களும் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன. மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கம் இதுகுறித்து அதிர்ச்சி அடைவதாக அதன் தலைவர் டத்தோ சைனுல் ரிசால் அபுபாக்கார் தெரிவித்துள்ளார். வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பின் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.
மீண்டும் ஷாரியா-பொது நீதிமன்றமா பிரச்சனை எழுமா?
அப்படியே, இந்துக்கள் தவறுதலாக முஸ்லீம்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இனி அவர்கள் எவ்வாறு அதற்கானத் தீர்வைப் பெறுவது என்பதுதான் அடுத்து எழும் கேள்வி!
சரியோ, தவறோ, அவர்கள் முஸ்லீம் எனப் பெயர் குறிப்பிடப்பட்டு விட்டதால், அவர்களின் மதம் குறித்த விவகாரங்கள் ஷாரியா நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுத்தான் தீர்வு காணப்பட முடியும் என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது.
ஆனால், தாங்கள் இந்துதான் என அவர்கள் வாதிட்டு, தங்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாண, பொது (சிவில்) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்களின் வழக்கை விசாரிக்க முடியாது என ஷாரியா நீதிமன்றத்திற்கே அவர்களின் வழக்கை அனுப்ப வேண்டுமென (பொது) நீதிமன்றம் முடிவு செய்யலாம்.
இந்திரா காந்தி வழக்கிலும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இதுதான் நடந்தது.
எனவே, மிகவும் சிக்கலான இந்தப் பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படப் போகின்றது? பிரதமர் தலையிடுவாரா? அல்லது நீதிமன்றங்களின் முடிவுக்கே விட்டு விடுவாரா, என்பது போன்ற கேள்விகளுடன் காத்திருக்கின்றது, மலேசிய இந்து சமுதாயம்!
-செல்லியல் தொகுப்பு