கோலாலம்பூர் – ‘த மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளம் இன்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (எம்சிஎம்சி) முடக்கப்பட்டுள்ளது.
டெல்கோ செல்காம் பயனர்களால் தற்போது அந்த இணையதளத்தைப் பார்வையிட முடியவில்லை. அந்த இணையதளத்திற்கு செல்லும் செல்காம் பயனர்களுக்கு, “தேசிய சட்டவிதிமுறைகளை” மீறியதற்காக இந்த இணையதளம் முடக்கப்பட்டதாக எம்சிஎம்சி தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், மற்ற இணைய சேவைகளைப் பயன்படுத்துவோரால், அந்த இணையதளத்தைப் பார்வையிட முடிகின்றது.
இன்று பிற்பகல் 4.45 மணியளவில் இருந்து செல்காம் பயனர்களால் அந்த இணையதளத்தைப் பார்வையிட முடியவில்லை என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த முடக்கம் குறித்து விசாரணை செய்து வருவதாக ‘த மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் ஜாபர் சாதிக், மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.