Home Featured இந்தியா இந்திய இரயில்வே வரவு செலவுத் திட்டம்: சாதாரண குடிமகனைக் கவரும் அம்சங்கள் என்ன?

இந்திய இரயில்வே வரவு செலவுத் திட்டம்: சாதாரண குடிமகனைக் கவரும் அம்சங்கள் என்ன?

756
0
SHARE
Ad

Suresh Prabu-Railway Minister-புதுடில்லி – நேற்று வியாழக்கிழமை இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு (படம்) சமர்ப்பித்த இரயில்வே இலாகாவுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதைந்திருக்கும், பொருளாதாரப் புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, சாதாரணக் குடிமகன்களைக் கவரப் போகும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்த ஒரு கண்ணோட்டம் இது:

  • கட்டணங்களில் உயர்வில்லை

எத்தனையோ நல்ல அம்சங்கள் இந்த இரயில்வே வரவு செலவுத் திட்டத்தில் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, இரயில் கட்டணங்களில் உயர்வு எதுவுமில்லை என்பதுதான் இந்த ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டின் முதலாவதான சிறப்பம்சமாகும்.

  • முன்பதிவு தேவையில்லாத இரயில் பயணங்கள்

“அந்தியோதயா” மற்றும் “தீனதயாளு” என்ற இரு பெயர் கொண்ட இரயில் சேவைகள் முன்பதிவு இல்லாத சேவைகளாகும். அதிகப் பயணிகள் கொண்ட இரயில் பாதைகளில் நடைபெறவிருக்கும் இந்த சேவைகள் தூரப் பயணங்களுக்கான விரைவு வண்டிகள் என்பதோடு, குடிநீர் வசதிகளையும் அதிகமான கைத்தொலைபேசிகளுக்கு மின்சக்தியை மறுசெறிவூட்டும் (recharge) முனைகளையும் இந்த சேவைகள் உள்ளடக்கியிருக்கும்.

#TamilSchoolmychoice

14 killed in two train accidents in India

  • முன்பதிவு பயணங்களில் அதிக வசதிகள்

முன்பதிவுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட விருக்கும் தேஜாஸ் ரக சேவைகள், பொழுதுபோக்கு அம்சங்களையும், உள்ளூர் உணவு வகைகள், வைஃபை என்ற கட்டற்ற இணையத் தொடர்பு வசதிகளையும் கொண்டிருக்கும்.

இந்த இரயில் சேவைகளில் ஈடுபடும் இரயில்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் பயணம் செய்யும் என்பதோடு, எதிர்கால இந்திய இரயில் சேவைகள் எப்படியிருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் முன்னுதாரணமாக இவை திகழும்.

  • அதிகமான முனைகளில் பயணச் சீட்டுகள் பதிவு

கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு முனைகளில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • இரண்டு நாட்களுக்கு முன்னதாக முன்பதிவுகள்

இறுதி நேரத்தில் பயணத்தில் ஈடுபட்டுவர்களுக்கு உதவும் பொருட்டு பயணத்துக்கு 2 நாட்களுக்கு முன்னதாக செய்யப்படும் முன்பதிவுகளை நடைமுறைப்படுத்தவும்,  இதற்கான பயணச்சீட்டு முகப்பிடங்களில் சிசிடிவி எனப்படும் புகைப்படக் கருவிகளை அதிகமாக நிர்மாணிப்பதும் இந்த அம்சத்தின் கீழ் இரயில்வே அமைச்சால் அறிமுகப்படுத்தப்படும்.

  • பண்பலை வானொலி அறிமுகம்

விரைவில் பண்பலை வானொலிகள் இரயில் பயணங்களில் இடம் பெறுவது குறித்து அந்த வானொலி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும்.

ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பும் வசதிகளும் மேம்படுத்தப்படும்

  • பயணிகளுக்கான தகவல் பரிமாற்றங்கள் அதிகரிப்பு

இரயில் பெட்டிகளில் ஜிபிஎஸ் எனப்படும் பயண வரைபடங்கள் இடம் பெறும். இதன் மூலம் அடுத்து பயணிகள் இறங்கி வேண்டிய இரயில் நிலையங்கள் குறித்த தகவல்களை அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

  • உடனுக்குடன் சுத்தம் செய்யப்படவிருக்கும் இரயில் பெட்டிகள்

சுத்தமான இந்தியா என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இரயில் பெட்டிகள் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படும். இரயில் பெட்டிகள் சுத்தப்படுத்தப்பட வேண்டுமென்றால், கைத்தொலைபேசிகளில் குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்பினால் உடனடியாக சுத்தம் செய்பவர் வந்து குறிப்பிட்ட இரயில் பெட்டியையோ, கழிவறையையோ, சுத்தம் செய்துவிடுவார்.

  • குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதிகள் அதிகரிப்பு

குழந்தைகளை பராமரிப்பதற்கான இட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். குழந்தைகளுக்கான உணவுகள், பால் போன்றவையும் போதுமான அளவுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

  • பயணங்களில் பாதுகாப்பு

பயணங்களின்போது அறவே விபத்துகள் நடப்பதைத் தவிர்ப்பது சேவைகளின் நோக்கமாக இருக்கும். இதன்மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணங்களை வழங்குவதற்கு இரயில்வே நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • காப்புறுதித் திட்டங்கள்

பயணிகளுக்கு ஏற்படும் இறுதிநேர இழப்புகள், அசம்பாவிதங்களால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு காப்புறுதித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

  • வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கூடுதல் சலுகைகள்

வயதானவர்களுக்கு பயணச் சீட்டுகளின் விலையில் சிறப்புக் கழிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

-செல்லியல் தொகுப்பு