சிட்னி – இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. தாக்குதலுக்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று நேற்று வியாழக்கிழமை ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
“இந்தோனேசியாவில் இருக்கும் சுற்றுப்பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஜகார்தா, பாலி மற்றும் லொம்போக் ஆகிய பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. ஏனெனில் தீவிரவாத அச்சுறுத்தல் உச்ச நிலையில் உள்ளது” என்று ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரங்கள் மற்றும் வணிகத் துறை வெளியிட்ட பயணம் தொடர்பான அறிவுறுத்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்களுக்கு தொடர்ந்து கிடைத்து வரும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தோனேசியாவின் எந்தப் பகுதியிலும், எந்த நேரத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்கிறது ஆஸ்திரேலியா. குறைந்தளவு பாதுகாப்பு உள்ள பகுதிகளுக்கும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாகக் கருதும் பகுதிகளுக்கும் ஏற்கெனவே தாக்குதலுக்கு உள்ளான இடங்களுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா அறிவுறுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியா தொடர்பிலும், இதே போன்ற எச்சரிக்கையை ஆஸ்திரேலியா விடுத்திருந்தது. அதில் தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என கோரப்பட்டிருந்தது.