Home Featured நாடு அரசியல் பார்வை: மொகிதின் யாசின் – அம்னோ பயணம் முடிகிறதா? புதிய போராட்டத்தின் தொடக்கமா?

அரசியல் பார்வை: மொகிதின் யாசின் – அம்னோ பயணம் முடிகிறதா? புதிய போராட்டத்தின் தொடக்கமா?

960
0
SHARE
Ad

najib-muhyiddinகோலாலம்பூர் – 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமியைத் தொடர்ந்து, வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்த அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா படாவிக்கு எதிராக அம்னோவில் போர்மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த காலகட்டம்!

படாவிக்கு எதிராக – பூனைக்கு யார் மணி கட்டுவது – என அம்னோவின் முன்னணித் தலைவர்கள் தயங்கிக் கொண்டிருந்தனர் அப்போது!

படாவி அம்னோ தலைவர் பதவியிலிருந்து இனியும் தாமதிக்காமல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என அப்போது குரல் கொடுத்தார் மொகிதின். அதன் மூலம், நஜிப் பிரதமராக வேண்டும், மொகிதினை அடுத்த துணைத் தலைவராக்கப்பட வேண்டும் என்ற அரசியல் வியூகக் கூட்டணி அம்னோவில் அப்போது அமைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பகாங், ஜோகூர் என இரண்டு வலுவான மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், முறையே தலைவர், துணைத் தலைவர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் மூலம் அம்னோ மீண்டும் அடுத்த 2013 தேர்தலில் கூடுதல் வெற்றியைக் காண முடியும் என்பதுதான் அப்போதைய அந்த வியூகத்தின் மற்றொரு கோணம்!

மொகிதினைத் துணைப் பிரதமராக நியமித்த நஜிப்

Muhyiddin-swearing-DPMஅந்த வியூகம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட, படாவி பதவியை விட்டு விலகினார். 9 ஏப்ரல் 2009ஆம் தேதி பிரதமரான நஜிப், மொகிதினுடனான தனது உட்கட்சிக் கூட்டணிக்கு ஏற்ப அவரை துணைப் பிரதமராக அன்று நியமித்தார்.

தொடர்ந்து, நஜிப் 2009ஆம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவையில் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நஜிப் ஆதரவுடன் மொகிதின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மொகிதினுக்கு புதிதாக முளைத்தது ஒரு சவால்.

2009ஆம் அம்னோ தேர்தலில் அவரை எதிர்த்து முன்னாள் சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப்பும், அப்போதைய மலாக்கா முதலமைச்சர் டத்தோ முகமட் அலி ருஸ்தாம் (படம்) இருவரும் போட்டியில் குதித்தனர்.

Ali Rustamமுதலில் சாதாரணமாகப் பார்க்கப்பட்ட இந்தப் போட்டி நாளடைவில் மொகிதனுக்கு எதிராக வலுப்பட்டது. அம்னோவின் முதுகெலும்பு அமைப்புகளுள் ஒன்றான 4-பி (4-B) இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவரான அலி ருஸ்தாம் பேராளர்கள் மத்தியிலான ஆதரவிலும், கணிப்பிலும் முன்னணி வகிக்க, தங்களின் வியூகங்கள் எங்கே சிதறுண்டு விடுமோ என்ற அச்சத்தில் நஜிப்-மொகிதின் கூட்டணி உடனடியாக எதிர்நடவடிக்கைகளில் இறங்கியது.

வாக்குகளுக்காக கையூட்டு (இலஞ்சம்) வழங்கினார் என்ற குற்றச்சாட்டு, பிரச்சார காலத்தின்போதே அலி ருஸ்தாம் மீது சுமத்தப்பட்டு, பண அரசியலுக்காக, போட்டியிடுவதிலிருந்து அவர் தடைசெய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 1,575 வாக்குகள் பெற்று மொகிதின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முகமட் தாயிப் 916 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

பின்னர் 2013இல் புதிய தேர்தல் நடைமுறைகளின் கீழ், நடைபெற்ற அம்னோ கட்சித் தேர்தலில் மீண்டும் நஜிப் தலைவராகவும், மொகிதின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2009ஆம் ஆண்டு அம்னோ கட்சித் தேர்தலில், மொகிதினைக் காப்பாற்றி, அவர் துணைத் தலைவராக வருவதற்கு உதவி புரிந்த நஜிப், கடந்த ஓராண்டாக நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக, நேற்றுடன் அதே அம்னோவில் மொகிதினின் அரசியல் வாழ்க்கையையும் முடித்து வைத்துள்ளார்.

துணைத் தலைவராக மொகிதின் இடைநீக்கம் செய்யப்பட, அவருக்குப் பதிலாக, அம்னோ உதவித் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி இடைக்காலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மொகிதினின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Tan-Sri-Muhyiddin-Yassinஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மொகிதின் யாசின், இன்னும் முழுவதுமாக அம்னோவில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகோ அம்னோ தொகுதியின் தலைவராக அவர் இன்னும் நீடிக்கின்றார். அம்னோவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து மட்டுமே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதிலிருந்து, மொகிதினை இன்னும் கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே நஜிப் எண்ணம் கொண்டுள்ளார் என்பதும், இதன்மூலம் தனது அதிகாரத்தைக் காட்டுவது ஒருபுறமிருக்க, தனக்கு எதிராக போர் முழக்கம் செய்ய உத்தேசிக்கும் மற்ற அம்னோ தலைவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவே மொகிதினின் நீக்கத்தை நஜிப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என்பதும் தெளிவாகின்றது.

முழுவதுமாக மொகிதினைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டால், அதன்பின்னர் நாடுமுழுக்க, சுதந்திரமாக நஜிப்புக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய மொகிதினுக்கு வசதியாகிவிடும்.

மொகிதினின் அம்னோ அரசியல் முடிவுக்கு வந்து விட்டதா?

இருப்பினும், மொகிதினைப் பொறுத்தவரை, ஒரு கோணத்தில் பார்த்தால், அம்னோவில் அவரது அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்றுதான் கூறவேண்டும். அம்னோவின் கடந்த கால வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால், ஒருமுறை விலக்கப்பட்டவர்கள் மீண்டும், கட்சித் தலைவரின் ஆதரவில்லாமல், கட்சியில் மீண்டும் உயர்பதவிகளை அடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

najib-and-muhyiddin-new-cabinetஅடுத்து என்ன நடந்தாலும் பரவாயில்லை என நஜிப்புக்கு எதிரானத் தனது போராட்டத்தை இன்னும் விரிவான முறையில் மொகிதின் தொடரலாம். அம்னோவில் சில தரப்புகளும், நஜிப் எதிர்ப்பாளர்களும் அவருக்கு ஆதரவு தரலாம். ஜோகூர் மாநில அம்னோ மற்றும் அந்த மாநில மக்களின் ஆதரவும், ஜோகூர் சுல்தானின் அரச குடும்ப ஆதரவும்கூட அவருக்குக் கிடைக்கலாம்.

நஜிப்புக்கு எதிராக தனிமனிதப் போராட்டம் நடத்திவரும் மகாதீரின் ஆதரவும், கட்சிக்கு வெளியிலிருந்து போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர் டத்தோ சைட் இப்ராகிம் அணியினரின் ஆதரவும்கூட மொகிதினுக்குக் கிடைக்கக் கூடும்.

நஜிப்புக்கு எதிராக போர் தொடங்கியுள்ள அம்னோ எதிர்ப்பாளர்கள் குழு, தங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என முழக்கமிட்டிருப்பதற்கு மொகிதினுக்குப் பக்கபலமாகவும், ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.

எதிர்க்கட்சிகள் கூட மொகிதினுக்கு ஆதரவாக இனி அணிதிரளக் கூடும். அன்வார் சிறையில் இருக்கும் இந்த காலகட்டத்தில் நஜிப்புக்கு எதிரான போராட்டத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த நினைக்கும் குழுக்களுக்கு மொகிதின் தலைமை வழங்கக் கூடும்.

ஆனால், மொகிதின், அன்வார் இப்ராகிம் போன்று ஒரு போராளியாகத் தன்னை இனி முன்னிறுத்தப் போகின்றாரா அல்லது துன் அப்துல்லா படாவி போன்று, அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொள்ளப் போகின்றாரா என்பதுதான் இப்போதைய கேள்வி!

நஜிப்புக்கு எதிரான போராட்டத்தில் மொகிதினின் கரங்கள் மக்கள் மத்தியில் ஓங்கி இருப்பதாகவே மேலோட்டமாகப் பார்க்கும்போது தெரிகின்றது.

ஆனால், அவர் அதனை எப்படி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நஜிப்புக்கு எதிரான போராட்டத்தை இன்னும் விரிவாக்கப் போகின்றார் – முன்னெடுத்துச் செல்லப் போகின்றார் – என்பது அவர் அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கைகளில் இருந்துதான் தெரியவரும்.

-இரா.முத்தரசன்