வாஷிங்டன் – அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக குடியரசு கட்சி சார்பில் இதுவரை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பகுதிகளில் டொனால்டு டிரம்ப் முதலிடத்தில் இருக்கிறார். ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளின்டன் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப் ஆரம்பத்தில் பலத்த போட்டியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இருந்தும் 7 மாகாணங்களில் வென்றுள்ளார். 68 வயதான ஹிலாரியும் இந்த 7 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனநாயக கட்சியில், ஹிலாரி கிளிண்டன் 873 பிரதிநிதி வாக்குகளையும், சாண்டர்ஸ் 296 பிரதிநிதி வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஆனால், 1,893 பிரதிநிதிகள் வாக்குகளை பெறுபவரே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். குடியரசு கட்சியில், டிரம்ப் 251 பிரதிநிதி வாக்குகளையும், குரூஸ் 114 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இக்கட்சியில், 1,237 பிரதிநிதிகள் வாக்குகளை பெறுபவரே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, 7 மாகாணங்களில் நடந்த வேட்பாளர் ேதர்விலும், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் வெற்றிவாகை சூடி வருகின்றனர். இதனால் இவர்கள்தான் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர்களாக களம் காணுவார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.