கொச்சின் – கேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான “மாநில திரைப்பட விருதுகள்” இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை திரைப்படத்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார். சிறந்த நடிகராக துல்கர் சல்மான் மற்றும் சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சார்லி படம் எட்டு விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த நடிகர்(துல்கர்), சிறந்த நடிகை(பார்வதி), சிறந்த இயக்குநர் (மார்டின்), சிறந்த வசனகர்த்தா (உன்னி, மார்டின்), சிறந்த ஒளிப்பதிவு (ஜோமோன் டி ஜான்ச்), சிறந்த கலை இயக்கம்(ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன்), சிறந்த ஒலிப்பதிவு (ராஜகிருஷ்ணன்), சிறந்த டிஜிட்டல் லேப் (பிரசாத் லேப், மும்பை) உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறந்த நடிகையாக பார்வதியும், சிறந்த ஒளிப்பதிவிற்காக ஜோமோன் டி ஜான்ச் இருவரும் என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விரு படங்களே அதிகப்படியான விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கேரளத் திரையுலகின் பல்வேறு சாதனைகளை முறியடித்த, 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமான பிரேமம் படத்துக்கு ஒரு விருது கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் மற்ற பல்வேறு விருதுகளில் கூட சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற பிரேமம், கேரள அரசு விருதில் ஒரு விருதைக் கூட பெறாதது, அங்குள்ள ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதும் அரசியல் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று இணையத்தள ரசிகர்கள் பொங்கிவருகின்றனர்.