தோக்கியோ – மிகவும் முன்னேறிய நாடாக கருதப்படும் ஜப்பானில், வேலை பணியிடங்களில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரதமர் ஷின்ஷே அபேவின் உத்தரவையடுத்து, ஜப்பான் தொழிலாளர் மற்றும் சுகாதார அமைச்சகம் இந்த ஆய்வினை மேற்கொண்டது. ஜப்பான் பொருளாதாரம் தொடர்ந்து மந்தமடைந்து வருவதையடுத்து, படித்த பெண்களை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பயன்படுத்த ஷின்ஷோ அபே திட்டமிட்டுள்ளார்.
இதனால் பணியிடங்களில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை களையும் வகையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக பணியில் இருக்கும் பெண்களிடமும், இதற்கு முன் அலுவலகங்களில் பணி புரிந்து வேலையை கைவிட்ட பெண்களிடமும் பல தரப்பட்ட கேள்விகள் அடங்கிய வினாத்ததாள்கள் அனுப்பப்பட்டன.
இதற்கு 25 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் பெண்கள் பதில் அளித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 3 வார காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜப்பானில் பணிக்கு செல்லும் 30 சதவீத பெண்கள், பாலியல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
உடன் பணி புரியும் ஆண்களே தகாத இடங்களில் தொடுவதாக 40 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். 38 சதவீத பெண்கள், செக்ஸ் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில பெண்கள் பாலியல் உறவுக்கு தங்களை நேரடியாக அழைத்த ஆண்களும் உண்டும் என்றும், ஆனால் 63 சதவீத பெண்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் இருந்தாலும் சகித்துக் கொண்டு பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் 10 இல் ஒரு சதவீதம் பேரே புகார் தர முன்வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான டொயாட்டோ, பானாசானிக், நிப்பான் ஏர்வேஸ் போன்ற 3600 நிறுவனங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஷின்ஷோ அபே முடிவு செய்துள்ளார்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயான பாலின இடைவெளியில், ஜப்பானுக்கு உலகளவில் 101வது இடம். 145 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில், சுரினாம் அசர்பைஜான் நாடுகளை விட ஜப்பான் பின்தங்கியுள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பெண்கள் முன் வரவேண்டுமென்று பேசுவார். ஆனால் பகுதி நேர வேலைக்கு செல்லும் பெண்களுக்கு போதுமான சம்பளம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் ஜப்பானிய பெண்கள் முன் வைத்துள்ளனர்.