சென்னை – முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துறையை ஏற்று ஆளுநர் ரோசைய்யா, கால்நடைத்துறை அமைச்சராக இருந்த டி.கே.எம். சின்னையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டி.கே.எம். சின்னையா வகித்து வந்த கால்நடைத்துறையை சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டி.கே.எம். சின்னையா வகித்து வந்த கட்சி பொறுப்பான காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வகித்து வந்த கட்சி பொறுப்பான புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் மற்றும் கட்சி பொறுப்புகள் மாற்றம் போன்ற அதிரடி நடவடிக்கைகளை ஜெயலலிதா அதிரடியாக கடந்த சில தினங்களாக எடுத்து வருகிறார். இது தேர்தலுக்காக கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.