சென்னை – சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய்க்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் செல்ல வேண்டும்.
அதில் பயணம் செய்ய 248 பயணிகள் நள்ளிரவு 2 மணிக்கு வந்து சோதனைகளை முடித்துக்கொண்டு காத்திருந்தனர். ஆனால் துபாயில் இருந்து நள்ளிரவு 2 மணிக்கு சென்னை வந்த துபாய் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு இருப்பதாக விமானி தகவல் தெரிவித்துவிட்டு சென்றார்.
இதனால் துபாய் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காலை 9 மணி வரை துபாய் விமானம் புறப்பட்டு செல்லவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளிடம் சமரசம் பேசினார்கள்.
பயணிகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு அனைவரும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் துபாய் விமானம் 12 மணி நேரம் தாமதமாக மாலை 3 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் 12 மணி நேரம் அவதி அடைந்தனர்.