துபாய் – திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்த சம்பவத்தில் மீட்புப் பணியின் போது, தீயணைப்பு வீரர் ஒருவர் மரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
விமானப்பயணிகளை காப்பாற்றும் முயற்சியில், ஜாசிம் இஸ்ஸா அல் பாலுசி என்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு குடியரசின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
”துபாய் விமான நிலைய விபத்தில் பயணிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர், ஜாசிம் தனது முயற்சியில் இன்னுயிரை ஈந்துள்ளார். அந்த இளைஞர் குறித்து தாய்நாடு பெருமை கொள்கிறது” என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்த 300 பயணிகளில் 226 பேர் இந்தியர்களாவர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நேற்று புதன்கிழமை காலை 10.19க்குப் புறப்பட்ட ஈகே 521 ( EK521) என்ற வழித் தட எண் கொண்ட எமிரேட்ஸ் விமானம்பிற்பகல் 12.50 மணிக்கு துபாய் அனைத்துலக விமானத்தில் தரையிறங்கியது.
ஆனால் அவசரமாகத் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் மோதி அந்த போயிங் 777 ரக விமானம் தீப்பிடித்தது. உடனடியாக அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.