சிங்கப்பூர் – இன்று வியாழக்கிழமை அதிகாலை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், ஸ்கூட் விமானம், எமிரேட்ஸ் விமானத்தின் மீது பக்கவாட்டில் மோதியது. இதில் எமிரேட்ஸ் விமானத்தின் இறக்கைப் பகுதி சேதமடைந்தது.
இது குறித்து ஸ்கூட் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் தகவலில், சீனாவின் தியான்ஜின் நகருக்குச் செல்லவிருந்த டிஇசட் 188 விமானம், புறப்படுவதற்கு முன்பு ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த 303 பயணிகள் காயமின்றி தப்பித்ததோடு, வேறு விமானத்தில் காலை 6 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எமிரேட்ஸ் விமானத்தின் இடது இறக்கையில் சேதம் ஏற்பட்டு தற்போது, அது மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதோடு, சாங்கி விமான நிலையம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.