சென்னை – கடந்த சில தினங்களாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். கட்சியிலும், ஆட்சியிலும் பல அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.
மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதாவின் மிகவும் நம்பகமான விசுவாசியாகிய ஓ.பன்னீர் செல்வத்துக்கா இந்த நிலைமை என பலரும் புலம்பி வருகின்றனர்.
வருகிற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தை கூட சிலர் கேட்கும் அளவுக்கு சென்றுவிட்டது ஓ.பி.எஸ் நிலமை. ஓ.பி.எஸ். ஆதரவாளார்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதாவால் களையெடுக்கப்படுவதால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓ.பி.எஸ். தலைமையில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்டர் படம் வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தில், பொறுத்தது போதும், பொங்கி எழு தலைவா… குனிந்தது போதும்… நிமிர்ந்திடு தலைவா… தமிழகம் திரும்பும் உன்னை நோக்கி என்று தேவர் இளைஞர் பேரவை பெயரில் வலம் வருகிறது.
இந்த போஸ்டரில், அதிமு-கவின் கொடியில், எம்ஜிஆர் படம் இடம் பெற்றுள்ளது போல் அமைக்கப்பட்டு உள்ளது. கட்சிக்கு எம்ஜிஆர் அதிமுக என பெயரிடப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பரப்பி வரும் இந்த புகைப்படத்தால் அதிமுக தலைமையின் கவனத்துக்கு சென்றால் ஓ.பி.எஸ்.-க்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய கட்சி விவகாரம் ஓ.பி.எஸ்.-க்கு தெரிந்து தான் நடக்கிறதா என உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.