கோலாலம்பூர் – மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 மாயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இழப்பீடு கோரும் பயணிகளின் குடும்பத்தினர் அதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளும் படி மலேசிய போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.
விமானம் மாயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதற்குள், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், அதன் படி, பாதிப்பட்ட குடும்பத்தினர் விண்ணப்பிக்க வரும் மார்ச் 8-ம் தேதி தான் கடைசி நாள் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.
மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ள தகவலின் படி, இதுவரை 169 குடும்பங்கள் மட்டுமே இழப்பீடு பெறுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 60 குடும்பத்தினருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.