வாஷிங்டன் – விமானந்தாங்கிப் போர்க்கப்பல் ஒன்றையும், மேலும் ஐந்து கப்பல்களையும் தென்சீனக் கடல் பகுதியை நோக்கிச் செல்லுமாறு அமெரிக்க அரசாங்கம் கட்டளையிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ள, அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல் ஜோன் சி.ஸ்டென்னிஸ்…
பசிபிக் பகுதிக்கான இராணுவப் பேச்சாளர் இந்த நடவடிக்கை குறித்துப் பேசுகையில், தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அந்தப் பகுதிக்கு அமெரிக்க இராணுவக் கப்பல்கள் செல்வது என்பது வழக்கமான ஒன்றுதான், இந்த வழக்கம் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றது என்று கூறினார்.
ஆனால் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் இராணுவ வலிமையைக் காட்டுவதாகவும், சீனாவுக்கு எதிரான ஓர் எதிர் நடவடிக்கையாகவும் கருதப்படுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தென்சீனக் கடல் பகுதியில், பிலிப்பைன்ஸ் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய சிறிய தீவுப் பகுதியில் சீனா எறிபடைகளை நிர்மாணித்து தனது இராணுவ பலத்தைக் காட்டத் தொடங்கியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதட்டத்தை சீனா அதிகரிக்கின்றது என பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது இராணுவ பலத்தைக் காட்டத் தொடங்கியுள்ளதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தான் எறிபடைகளை நிர்மாணித்ததில் தகராறு ஏதுமில்லை என்று கூறிவரும் சீனா, தனது உரிமைக்குட்பட்ட பகுதிகள் எனக் கருதும் பகுதிகளில் தான் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையில், தென்கொரியாவை நோக்கி வட கொரியா இராணுவமும் எறிபடைகளை அண்மையில் பாய்ச்சியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.