புதுடில்லி – உலகம் எங்கும் உள்ள இந்துக்களுக்கு இன்று சிவராத்திரி என்னும் மற்றொரு புனித நாள். சிறப்பான சிவராத்திரியாக இந்த ஆண்டு கருதப்படுவதால், கோடிக்கணக்கான இந்துக்கள் இன்று இரவு முழுவதும் கண்விழித்து, பிரார்த்தனைகளில் ஈடுபடுவதோடு, சிவன் ஆலயங்களில் விடிய, விடிய நடைபெறும் அபிஷேகங்களிலும் கலந்து கொள்வர்.
புதுடில்லியிலும், இன்று சில பாஜக-தேமுதிக தலைவர்களுக்கு சிவராத்திரியாக அமையலாம் என்கின்றன தமிழக அரசியல் வட்டாரங்கள்.
மோடியுடன் விஜயகாந்த் – பாஜகவின் பொன் இராதாகிருஷ்ணன் (கோப்பு படம்)
தமிழகத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, விஜயகாந்தின் தேமுதிக கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் – இல்லை, இல்லை – அவரது குடும்பத்தினர் இன்று புதுடில்லியில் முகாமிட்டு, பாஜகவுடன் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க மும்முரமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தமிழகத் தகவல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
நாளை அமாவாசை! அமாவாசையன்று செய்யும் காரியம் அல்லது தொடங்கும் பணி சிறப்பாக முடியும் என்பது ஐதீகம். எனவே, நாளை அமாவாசையன்று பாஜக-தேமுதிக கூட்டணி புதுடில்லியில் அறிவிக்கப்படலாம் அல்லது கோடிகாட்டப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
இதனால்தான், அவசரம் அவசரமாக, தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மூலம், திமுக கூட்டணி எதுவும் இதுவரை முடிவாகவில்லை என்ற அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் உள்ளிட்ட குழு ஒன்று தற்போது புதுடில்லியில் முகாமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இருவரும் சென்னையில் இல்லை என்பதால், பாஜக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த டில்லி சென்றிருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.
அங்கு பாஜக தலைவர் அமித் ஷா, தமிழகத்துக்கான தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தக் கூடும் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.