சிட்னி – ஒரு துப்பாக்கிக்காரனுக்கும், ஆஸ்திரேலியா போலீசாருக்கும் இடையில் நேற்று காலை தொடங்கிய முற்றுகை சுமார் 6 மணி நேரங்கள் நீடித்த பின்னர், அந்தத் துப்பாக்கிக்காரனின் தற்கொலையோடு ஒரு முடிவுக்கு வந்தது.
சிட்னி தொழிற்சாலை ஒன்றில் இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை நிகழ்ந்தது. துப்பாக்கி சூடு நடத்திய தாக்குதல்காரன் இரண்டு பேரைக் காயப்படுத்தியதோடு, ஒருவனைச் சுட்டுக் கொன்றான்.
சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சுற்றி வளைத்த ஆஸ்திரேலிய காவல் துறையினர்…
சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இங்கல்பர்ன் என்ற தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள அந்தத் தொழிற்சாலையை உடனடியாகச் சுற்றி வளைத்த ஆஸ்திரேலியக் காவல் துறையினர், அந்தப் பகுதியை முற்றுகையிட்டதோடு, அதனைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
துப்பாக்கித் தாக்குதல்காரன் வேய்ன் வில்லியம்ஸ் (Wayne Williams) எனக் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளான்.
இந்த முற்றுகை ஒரு முடிவுக்கு வந்தபோது, மூன்று பேர் அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அவர்கள் துப்பாக்கித் தாக்குதல்காரனால், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இறுதியில், அந்தத் துப்பாக்கிக்காரனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்ததைத் தொடர்ந்து இந்த முற்றுகை சம்பவம் ஒரு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
தாக்குதல்காரனின் நோக்கமும் அவனுக்கும் அந்தத் தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு என்பது குறித்தும் இன்னும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தாக்குதல்காரனான வில்லியம்ஸ் ஒரு மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவன் என்றும், அவனால் சுட்டுக் கொல்லப்பட்டவனும், மற்றொரு மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவன் என்றும் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலியப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
சம்பவம் நடந்த இடத்தில் ஒருவன் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட காட்சி
காயமடைந்தவர்கள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார்கள் என்றும் தற்போது சீரான உடல்நலத்தோடு இருக்கின்றார்கள் என்றும், அவர்களில் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தில் ஒருவன் கைது செய்யப்பட்டான் என்றும் ஆனால் அவன் போலீஸ் விசாரணைக்கு இடையூறாக இருந்ததற்காகத்தான் கைது செய்யப்பட்டான் என்றும் சம்பவத்திற்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.